நமது வாழ்க்கையில் வெற்றிகள் குவியவேண்டும் ;ஆனால், இந்த வெற்றிகள் ஏதோ குருட்டுத்தனமாக (அதிர்ஷ்டம்) தானே வந்து விடுமா ?

நமது வாழ்க்கையில் வெற்றிகள் குவியவேண்டும் என்று நம்மில் பலரும் விரும்புவதில் தவறில்லை.

மகிழ்ச்சியில் திளைக்க விழையும் முன்னோட்டமே நாம் குவிக்கும் வெற்றிகள்.

ஆனால், இந்த வெற்றிகள் ஏதோ குருட்டுத்தனமாக (அதிர்ஷ்டம்) தானே வந்து குவிந்துவிடும் என்று நினைத்தால் அதைவிட மிகப்பெரிய தவறு வேறு ஏதுமில்லை!

உழைப்பு, கடும் உழைப்பு, இடைவிடாத உழைப்பு - இப்படி பல கட்டங்களில் உழைத்து உழைத்துத்தான் வெற்றியை அறுவடை செய்ய முடியும். எனவே, இளையர்கள் முதல் முதியோர் வரை உழைக்க ஒருபோதும் பின்வாங்கக் கூடாது!

உழைப்பு என்பது மூலதனம் - முதல் இல்லாவிட்டால், வெற்றி என்ற லாபத்தை எவரும் நுகரவே முடியாதே!

குளிரைப் போக்க, குளிர்காய விரும்புகிறோம்; விறகு போடாமல், தீ மூட்டாமல், வெறும் வீட்டு அடுப்பின் கனலை மட்டுமே நம்பி, அந்த வெப்பமே போதும் என்று நினைத்தால், குளிர் தொல்லை நீங்குமா?

விறகு பிறகு, வெப்பம்தான் எனக்கு முதலில் வேண்டும் என்று விதண்டாவாதம் பேசி, வெற்றியைக் காண முடியுமா?

அவ்வளவு ஏன்? முதல் போடாமல், வைப்பு நிதியைப் போடாமல், வட்டி மட்டும் நமக்கு கைநிறைய, பை நிறையக் கிடைக்கவேண்டுமென்று விரும்பினால், அது வெற்றிப் பாதைக்கு நம்மை அழைத்துச் செல்லுமா? எங்காவது வங்கிக்குச் சென்று, அய்யா உங்கள் வங்கியிலிருந்து எனக்கு வட்டியை முதலில் கொடுங்கள்; பெருந்தொகையை பிறகு நான் முதலீடு (டெபாசிட்) செய்கிறேன் என்று எவராவது கூறினால், வங்கி மேலாளர் சிரிக்காமல் இருப்பாரா? இப்படிக் கூறுபவரை சரியான பைத்தியக்காரர் போலும் இந்த ஆசாமி என்று வெளியில் சொல்லாவிட்டாலும், மனதிற்குள் எண்ணமாட்டாரா?

எனவே, முடிந்துவிட்ட எல்லை என்று எதனையும் கருதாதீர்கள்!

அது உங்கள் பார்வையை, உழைப்பைப் பொறுத்தது! வாழ்க்கையில் உழைப்பின்மூலம் உயர்வதற்கு வயதாகிவிட்டது இனிமேல்தானா சம்பாதிக்கப் போகிறோம்? என்று விரக்தியுடன் பேசாதீர்கள்! முடியும், முடியும், முடியும் என்று மனதிற்குள்ளே சொல்லிக் கொண்டு எதையும் செய்யுங்கள். உள்ளத்தின் உறுதி, இடையறாத சிந்தனை மனதில் ஜெபிப்பதைப்போல எண்ணிக்கொண்டே உங்கள் அடிகளை எடுத்து வையுங்கள்!

உறவுகளை, நட்புகளை மட்டும் நம்பி உழைப்பை அலட்சியப்படுத்தி விடாதீர்! உழைப்பு அனைவருக்குமே மூலதனச் செல்வம். குடும்பம், அமைப்பு, இயக்கம், தொழிற்கூடம் என்று பல்வேறு மேலாண்மைத் துறைகள் இருந்தபோதிலும், அதில் உள்ள அனைவரும் உழைப்பில் உங்களை சிறப்பாக முன் உதாரணமாக, பின்பற்றத் தகுந்தவராக (சுடிடந ஆடினநட) இருக்கும்படி உழையுங்கள் - உழைத்துக் கொண்டே இருங்கள்!

நான் உத்தியோகத்திலிருந்து ஓய்வு பெற்றுவிட்டேனே - ரிட்டயர் ஆகிவிட்டேனே இன்னும் என்ன உழைப்பது? என்று கேட்காதீர்கள்!

பணிக்குத்தான் ஓய்வே தவிர, உழைப்புக்கு, தொண்டுக்கு ஓய்வே கிடையாது. எனவே, ஓய்வு பெற்றவர்கள் - ஊதியம்பற்றிக் கவலைப்படாமல் - தொண்டறப் பணியில் ஈடுபட்டு சமுதாய வளர்ச்சிக்கு உழையுங்கள். மேலை நாடுகளில் பெரும் பெரும் சம்பளம் பெறுவோர்கூட, ஞாயிறு போன்ற விடுமுறை நாள்களில் தங்கள் அந்தஸ்தை மறந்து எளிய தொண்டர்களாக (Volunteers) உழைப்பதில்தான் பெருமகிழ்ச்சியும், மனநிறைவும் கொள்கிறார்கள்!

சும்மா இருந்தால் சோம்பேறிகளாகி, துருப்பிடித்த கருவி பலம் இழந்து, வலுவிழந்து போவதுபோல் மனிதர்களும் ஆகிவிடுவர்! எண்ணிப் பாருங்கள்!

உலகத்தை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்களோ, அதைப் பொருத்துத்தான் மற்றவர்கள் உங்களை மதிப்பதும், மதிக்காததும்!

வேர்களாகிய நீங்கள் சிறப்பாக இருந்தால்தான், விழுதுகள் பலமாக நின்று தங்களையும் பாதுகாத்து, உங்களையும் பாதுகாக்கும்!

மாம்பழம் வேண்டுமென்று விரும்பி எட்டி மரத்தின் கீழே நின்று வேண்டினால் மாம்பழம் கிடைக்குமா? மாமரத்தில் எவ்வளவுதான் மாங்காய் புளித்தாலும், அது ஒருபோதும் எட்டிக்காயை நமக்குத் தராதே!

எனவே, அடிப்படை, அஸ்திவாரம் போன்றவர்கள், குடும்பத்தில் முதியவர்கள், இளையர்கள் (கோபுரங்கள்) நன்கு வளர அடித்தல(ள)ம் சிறப்பாக - பலமாக இருக்கவேண்டாமா?

எண்ணுங்கள் - செயல்படுங்கள்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மூக்கறுப்பு கல்வெட்டு பேளூர் சேலம் மாவட்டம்

செக்ஸ் படங்களையும் அனுமதிக்கலாம்!-கமல்

பெரியார் மருந்தியல் மகளிர் கல்லூரி ;கல்லூரி வளாகத்தில் ஆராய்ச்சிக்குப் பயன்படும் வகையில் சுமார் 200 வகையான மூலிகைச் செடிகளை உடைய மூலிகைப் பண்ணை