வாரணம் ஆயிரம் விமர்சனம் வாரணம், கவர்ந்திழுக்கும் தோரணம்!

வாரணம் ஆயிரம்
Vaaranam Aayiram

நமது மேல் இமைக்கும் கீழ் இமைக்கும் நடுவில் நின்று கொண்டு இமைகொட்ட விடாமல் பிரமிக்க வைத்திருப்பது சூர்யாவும், ஒளிப்பதிவாளர் ரத்னவேலுவும்தான்! சூர்யாவின் நடிப்பில் ராணுவ மிடுக்கு என்றால், ரத்னவேலுவின் ஒளிப்பதிவில் ரத்தின ஜொலிப்பு! ஹாரிஸ் ஜெயராஜின் இசையும் நம்மை அள்ளிக் கொண்டு போகிறது!

ஆயிரம் யானைகளை இழுத்துச் செல்ல இந்த மூன்று குதிரைகளே போதும் என்று நினைத்துவிட்டார் போலும் கவுதம்! படம் நெடுகிலும் பிரேக் பிடித்துக் கொண்டே வண்டி ஓட்டியதுபோல பிரமை! (கொஞ்சம் கத்தரி போட்டா ரிலீஃப் கிடைக்கலாம்)

அப்பா சூர்யா கேன்சரில் இறந்துவிட, ராணுவத்தில் இருக்கும் மேஜர் சூர்யாவுக்கு தகவல் போகிறது. தன் வாழ்வின் ஒவ்வொரு தருணத்திலும் அப்பாவின் துணை எப்பேர்பட்டது என்பதை அசை போடும் சூர்யாவின் மௌன அழுகையும், மனசை பிசையும் பிளாஷ்பேக்கும்தான் கதை. வழக்கம்போல் 'வாழை மரம் தன் வரலாறு கூறுதல்' ஸ்டைலைதான் இந்த படத்திலும் பின்பற்றியிருக்கிறார் கவுதம் வாசுதேவ மேனன்.

19 வயசு சூர்யா வெளிப்படுத்தும் அடலசன்ட் குறு குறுப்புகள் அழகு! (விட்டால் செல்வராகவனை மிஞ்சிவிடுகிற வாய்ப்புகள் இருந்தும் அடக்கி வாசித்த கவுதமுக்கு நன்றி) அப்பா சூர்யாவுக்கு கச்சிதமாக பொருந்துகிற மேக்கப்பும், நடிப்பும், அளவெடுத்து அவருக்காகவே உருவாக்கப்பட்ட கம்பீரம்! அடிவாங்கிக் கொண்டு வந்து நிற்கும் பிள்ளையிடம், எதுக்காக எக்சர்சைஸ் பண்றே? போய் அடிச்சிட்டு வா என்பதும், அதே பிள்ளை போதைக்கு அடிமையாகி பேயாட்டம் போடும்போது தவிப்பதுமாக சூர்யாவின் ஸ்கோர், ஜோர்! தொண்டையில் கேன்சர் வந்து பேச முடியாத தருணத்தில் பேரப்பிள்ளைக்கு கதை சொல்ல முடியவில்லையே என்று தவிப்பது நெஞ்சை அடைக்கும் சோகம். அமெரிக்காவில் அறிமுகமாகும் நண்பரின் குழந்தையை காப்பாற்ற சூர்யா போராடும் அந்த எபிசோட், த்ரில் ரேஸ்! சண்டைக்காட்சிகளில் உச்சக்கட்ட உக்கிரத்தை காண்பிக்கிறார்.

என் இனிய பொன் நிலாவேவை கிடாரில் அசைபோடும் சூர்யா, ரயிலில் சமீரா ரெட்டியிடம் மனசை தவறவிட்டு, அதை அமெரிக்காவில் மீட்டெடுக்கிற காட்சிகள் கவிதை. எங்கிருந்தாலும் வருவேன் என்கிற சூர்யா, சமீராவை அமெரிக்கா வரை சென்று துரத்துவது சுவாரஸ்யம் என்றால், அங்கே ஏற்படும் முடிவு திகைப்பு தரும் திருப்பம்.

ஜெமினி காலத்திற்கு இழுத்துப் போகிறது சிம்ரன்-சூர்யா ஜோடிகளின் காதல். காஸ்ட்யூமருக்கும், ஆர்ட் டைரக்டருக்கும் ஸ்பெஷல் அப்ளாஸ் போடலாம். நீண்டகாலம் கழித்து சிம்ரனின் ரசிகர்கள் புத்துணர்ச்சி பெறுவார்கள்.

தமிழ் படங்களில் நடிக்க கூடாது என்று திவ்யாவுக்கு கன்னட திரையுலகம் கட்டுப்பாடு விதித்தால், தமிழ் ரசிகர்கள் தேடிப் போயாவது நன்றி சொல்வார்கள்.

அமெரிக்காவுக்கே போயிருந்த அனுபவத்தை தருகிறது ரத்னவேலுவின் ஒளிப்பதிவு. பின்னணி இசையில் மட்டுமல்ல, எல்லா பாடல்களிலும் நம்மை இருக்கையோடு கட்டிப்போடுகிறார் ஹாரிஸ். குறிப்பாக 'நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை...'

ஒரு காட்சியில் டபடபடப சத்தத்தோடு ஹெலிகாப்டரில் போய் இறங்குகிறார்கள் ராணுவ வீரர்கள். இவர்கள் வரும் வரைக்கும் தப்பித்து ஓடாமல் இருக்கிறார்களாம் தீவிரவாதிகள்? இடையிடையே வரும் தமிழ் வசனங்கள் இது தமிழ்ப்படம்தான் என்று நிரூபிக்க வசதியாக இருக்கும்.

சின்ன சின்ன குறைகள் இருந்தாலும் கவுதம் காட்டிய வாரணம், கவர்ந்திழுக்கும் தோரணம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மூக்கறுப்பு கல்வெட்டு பேளூர் சேலம் மாவட்டம்

செக்ஸ் படங்களையும் அனுமதிக்கலாம்!-கமல்

பெரியார் மருந்தியல் மகளிர் கல்லூரி ;கல்லூரி வளாகத்தில் ஆராய்ச்சிக்குப் பயன்படும் வகையில் சுமார் 200 வகையான மூலிகைச் செடிகளை உடைய மூலிகைப் பண்ணை