நண்பர்களே, வல்லமை - வெற்றியைக் குவிக்கும் ஆற்றல் எவரோ தருவதல்ல; நம்முள் உள்ள ஒன்று!
வாழ்க்கையில் நம்மில் பலரும்விதைக்காமலே அறுக்க ஆசைப்படுகிறோம்.
உழைக்காமலேயே பெருஞ்செல்வம் திடீரெனநமக்குக் கிடைக்கவேண்டும் என்று எண்ணிஏங்குகிறோம்.
பசு மாட்டை நமக்கு ஒருவர் தானமாகக்கொடுத்தால்கூட அதற்குத் தீனிபோடாமலேயே அதனிடம் சென்று கறக்கமுயற்சிக்காமலேயே, புராணங்களில்வருவதுபோல தானே பாலைச் சொரிந்துதேவைப்படும் அளவிற்குத் தரவேண்டும் என்றுமுட்டாள்தனமாக விரும்புகிறோம்!
காணி நிலத்தைத் தந்து விடுகிறார் நமக்கு ஒருவர். மகிழ்ச்சி. அது, தானேவிளையுமா?
மண்ணைப் பண்படுத்தி உழ வேண்டாமா? அகல உழுவதிலும் ஆழமாகஉழவேண்டாமா?
உழுதால் மட்டும் போதுமா? விதைக்க வேண்டாமா? அதுவும் பருவத்தேவிதைக்க வேண்டாமா? ஆடிப்பட்டம் தேடிவிதை என்ற பழமொழி நினைவுக்குவரவில்லையா?
எந்த வெற்றியும் கடுமையாக உழைக்காமல் நம்மிடம் வந்து முத்தம் கொடுக்காது!
ஏன் இப்படி கூறவேண்டியிருக்கிறது என்றால், இன்றைய சமூகச் சூழலில், குறுக்கு வழிகளை, எண்ணி பலர் கழுத்தில் சுருக்குப் போட்டு மாள்கின்றபரிதாபத்தைப் பார்க்கிறோம்!
தேர்வில் மிகப்பெரிய வெற்றியைப் பெற விரும்பும் மாணவன், பிள்ளையார்கோயிலுக்குச் சென்று, வேண்டிக்கொண்டு உனக்கு 101 தேங்காய் உடைக்கிறேன். பிள்ளையாரப்பா எனக்கு 100-க்கு 100 மார்க் போடும்படி செய் என்று கேட்டால், படிக்காமல் இவர் நம்பும் கடவுள் இவருக்கு 100 மார்க் போட்டுவிடுவாரா? அப்படிஒரு வழி இருந்தால் நாடெங்கும் பள்ளிக்கூடங்களுக்குப் பதில், ஆசிரியர்களுக்குப் பதில், வெறும் பிள்ளையார் கோயில்கள்தானே இருக்கும்?
தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சி தன்
மெய்வருத்தக் கூலி தரும் (குறள் 619).
வைதிகர்களின் கற்பனைக் கூற்றுப்படி, தெய்வம் விதித்த விதியானது, கருதியபயனைத் தரவில்லையே என்று ஒருவன் கவலைப்படவேண்டியதில்லை; ஏனெனில், முயற்சியில் ஈடுபடுவது - ஒருவன் தன் உடலை வருத்தியவருத்தத்தின் அளவுக்கு அவனுக்கு கூலியைக் கொடுக்கும்.
(திருக்குறள் நாவலர் உரை, பக்கம் 127).
அதுமட்டுமல்ல,
வாழ்க்கையில் உழைப்பவர்களுக்குக்கூட தளர்ச்சி, சோர்வு, விரக்தி ஏற்பட்டுவிடாமுயற்சிப் பாதையின் கதவுகளை அடைத்துவிடக் கூடும்.
சலிப்போ, களைப்போ அடையாமல் தொடர்ந்து இலக்கு நோக்கி இடையறாதுமுயற்சித்துக் கொண்டே இருந்தால் மூடிய கதவுகள் திறக்கும்; வாடிய பயிர்கள்வளரும், தேடிய செல்வம் - வெற்றி குவியும்.
சிலர் தலைவிதி என்று தப்பாக எண்ணி அதை வெல்ல எவரால் முடியும்? வரவேண்டும் என்று இருந்தால், அது தானே நமக்கு வரும்; வீணே எவ்வளவுபறந்தாலும் பலன் கிட்டவே கிட்டாது என்று மூட நம்பிக்கையின் உச்சியில் நின்றுதன்னம்பிக்கையை இழந்தவர்களாகி, தோல்வியில் புரளுவர்.
அவர்களைப் பார்த்து வள்ளுவர் சம்மட்டி அடி அடித்துச் சொல்கிறார்!
ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவு இன்றித்
தாழாது உஞற்று பவர் (குறள் 620).
தளர்வு இல்லாமலும், தாழ்வு மனப்பான்மை இல்லாமலும், - உம்... இது நமக்குக்கிடைக்கவே கிடைக்காது என்ற தாழ்வு மனப்பான்மைக்கு இடங்கொடுக்காமலும், மேற்கொண்ட செயலில் தொடர்ந்து விடாமுயற்சியில் ஈடுபடுபவர்கள்இயற்கைப் பண்பறிவின் அடிப்படையில் வெளிப்படும் வல்லமைமிக்கமுனைப்புத்தன்மையையும், புறங்காட்டி ஓடச் செய்யும் வல்லமைபடைத்தவராவர்!
எனவே, நண்பர்களே, வல்லமை - வெற்றியைக் குவிக்கும் ஆற்றல் எவரோதருவதல்ல; நம்முள் உள்ள ஒன்று!
வெளியே கொணர உழையுங்கள்!
உழையுங்கள் - ஓய்வறியாது உழையுங்கள்!
தோல்வி கண்டு துவளாதீர்; தோண்டத் தோண்டச் சுரப்பதுதான் ஊற்று என்றுகருதி தோண்டிக்கொண்டே இருங்கள்!
கருத்துகள்