தெனாவட்டு ;கூவாகம் திருவிழாவை இவ்வளவு விபரமாக ஆவணப்படங்களில் கூட பாத்திருக்க முடியாது.

தெனாவட்டு
Thennavattu

இரும்படிக்கிற தொழில் செய்கிற ஹீரோ, எறும்படிக்கிற மாதிரி வில்லனை அடித்துப் போடுகிறார். தம்பியை அடித்த ஹீரோவை வில்லனின் அண்ணன் துரத்த, காதலியோடு ஓடுகிறார் ஹீரோ. அவரே துணிச்சலாக திரும்பி நின்றால் என்னாகும்? இப்படி இரண்டரை மணிநேர படத்தில் மோதல், ஆக்ஷன் என்று கலவரப் பொங்கலை பரிமாறியிருக்கிறார் இயக்குனர் கதிர். அங்கங்கே தென்படும் காதல் முந்திரியில் மட்டும் கனஜோரான ருசி.

கிராமத்திலிருந்து சென்னைக்கு புறப்பட்டு வரும் ஜீவா, ரவிகாளேயிடம் வேலைக்கு சேருகிறார். தொழில் அருவா அடிச்சு கொடுப்பது. இதற்கிடையில் பூனம் பாஜ்வாவிடம் காதல் வயப்படுகிற ஜீவா, தனது காதலியை ஒருவன் நடுரோட்டில் மானபங்க படுத்த முயலும்போது, அவனை நையப்புடைக்கிறார். உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடக்கும் அவன், ரவிகாளேயின் தம்பி என்று தெரிய வரும்போது, தைரியமாக அவரிடமே போய், “தம்பி தப்பு பண்ணுச்சு. நான்தான் அடிச்சேன்” என்று தலையை கொடுக்கிறார். பிறகென்ன..? தலையை எடுக்க ரவிகாளே துரத்த, காதலியை காப்பாற்ற ஊரைவிட்டே ஜீவா ஓட, ஆக்ஷன் நெருப்பில் தியேட்டரே சூடாகிறது.

சில காட்சிகளில் பிரமிக்க வைக்கிறார் இயக்குனர். பாலுக்கு அழும் குழந்தைக்கு பால் கொடுக்க முடியாமல் தவிக்கும் தாயிடமிருந்து குழந்தையை வாங்கி, விக்ரகத்திலிருந்து வழியும் பாலை பிடித்துக் கொடுக்கிறாரே அசத்தல்! டெல்லி கணேஷ§க்கு கோவிலில் வணக்கம் வைக்காமல் இருப்பதற்கு ஜீவா சொல்லும் காரணம் மற்றொரு அசத்தல்! தமிழ்சினிமாவிலும் ‘இரண்டும் கெட்டான்’களாக அவஸ்தைப்படும் திருநங்கைகளுக்கு இந்த படத்தில் ராஜ மரியாதை! ‘உங்களை என் பிள்ளைங்களா நினைச்சுக்கிறேன்’ என்று உருகும் நிஜமான திருநங்கை ரேவதியின் நடிப்பும், உயிர் தியாகமும் வணக்கத்திற்குரியது. கூவாகம் திருவிழாவை இவ்வளவு விபரமாக ஆவணப்படங்களில் கூட பாத்திருக்க முடியாது. ஒளிப்பதிவாளருக்கு பாராட்டுகள்.

சாலையோரம் பாடுகிற பார்வையற்றவர்களிடம் கரிசனம் காட்டும் பூனம் பாஜ்வா, ஜீவாவின் வெகுளித்தனத்தை ரசிப்பதுடன் காதலில் விழுவதும் அழகு. ஜீவா கொடுக்கும் வெறும் கடிதத்தை பார்த்து பூனம் புருவம் சுருக்க, ‘நல்லா பாருங்க... அதிலே நானே தெரிவேன்’ என்கிற ஜீவாவின் டயலாக்கில் காதலின் வாசனை!

பார்த்தவுடனே எரிச்சலை தருகிற வில்லன், அளந்து அளந்து பேசுவது மேலும் எரிச்சல்.

கிராமத்து தாய் சரண்யா, அதிரடியாக வில்லன் கோஷ்டியிடம் அரிவாளை காட்டி அவர்களை விரட்டும் போது தியேட்டரே கலகல! “அவன் இப்போ வேணும். போய் தேடுங்கடா” என்ற டிபிக்கல் வில்லன் ரவிகாளே. (இன்னும் கொஞ்சம் எதிர்பார்த்தோம் சாரே) கருப்புவின் ‘சுதந்திரத்தில்’ நாய் தலையிடுவது நல்ல காமெடி!

ஸ்ரீகாந்த் தேவாவின் இசையில் சில பாடல்கள் துள்ளல்! அனல் அரசுவின் ஆக்ஷன் பிளாக்குகள் விசேஷம். எடிட்டிங் டேபிளில் இருந்த அரிவாளைதான் ஜீவா எடுத்துக் கொண்டாரே, பிறகெப்படி வேலை செய்வாராம் எடிட்டர்?

வெட்டு பிரியர்களுக்கு இந்த படம் லட்டு!

கருத்துகள்

பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
விமர்சனம்ன்னா..... இப்படித்தேய்ன் இருக்கணும்!!!
கொடுத்த கவருக்கு கொஞ்சமும் வஞ்சகம் பண்ணாம எழுதப்பட்ட அக்மார்க் விமர்சனம்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தந்தை பெரியாரும், சுயமரியாதை இயக்கமும் தோன்றுவதற்கு முன்... மனித சமத்துவப் போராட்ட முன்னோடிகள்

பெரியார் மருந்தியல் மகளிர் கல்லூரி ;கல்லூரி வளாகத்தில் ஆராய்ச்சிக்குப் பயன்படும் வகையில் சுமார் 200 வகையான மூலிகைச் செடிகளை உடைய மூலிகைப் பண்ணை

பிரபாகரன் என்ற பெயரை சொல்லக்கூடாதா? எனது நாக்கை வெட்டிக் கொள்வேனடா திரைப்பட இயக்குனர் பாரதிராஜா