படிப்பது - பகுத்தறிவை வளர்ப்பதற்கேயன்றி, பிளவுபடுத்தும் ஜாதிச் சாக்கடையில் வீழ்வதற்கல்ல!
படிப்பது ஜாதியை வளர்ப்பதற்கல்ல!
சென்னை சட்டக்கல்லூரியில் மாணவர்கள் மத்தியில் ஜாதிஅடிப்படையில் நடந்த மோதல்கள் உள்ளபடியே வெட்கப்படத்தக்கதாகும்.
எதிர்கால உலகைப் படைக்கக்கூடியவர்கள் என்றுகணிக்கப்படக்கூடிய மாணவர்கள் - அதுவும் சட்டம் படிக்கும்மாணவர்களின்அறிவு எந்தத் தரத்தில் இருக்கிறது என்பதை எண்ணிப்பார்க்கும்பொழுது வெட்கமும், வேதனையும் கலந்து நம்மைத் தாக்குகின்றன; தலையைத் தொங்கப் போடவும் வைக்கிறது.
தாழ்த்தப்பட்ட மாணவர்களும், பிற்படுத்தப்பட்ட மாணவர் களும் கல்வி, வேலைவாய்ப்புகளில் வாய்ப்புகள் அளிக்கப்பட்டு வளர்ச்சிப் பாதையில் புலிப்பாய்ச்சலாக அமையவேண்டும் என்பதற்காக தந்தை பெரியார் பாடுபட்டார். அவர்கண்ட இயக்கம் அன்று முதல் இந்தச் சமூக விழிப்புணர்வுப் பணியினைத்தொடர்ந்து செய்துகொண்டே இருக்கிறது.
தாழ்த்தப்பட்டவர்களும் சரி, பிற்படுத்தப்பட்டவர்களும் சரி, பார்ப்பனியவருணாசிரம அடிப்படையில் உரிமைகள் மறுக்கப்பட்டவர்கள்தாம். கல்விப்பக்கம் அவர்கள் தலை வைத்துப் படுக்கக் கூடாது என்பதிலே பார்ப்பனர்கள்குறியாக இருந்தவர்கள்தாம்.
இரண்டு முறை சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் சென்னை மாநிலத்துக்குமுதலமைச்சராக இருந்திருக்கிறார். அந்த இரண்டு முறையுமே கிராமத்துப்பள்ளிகளை இழுத்து மூடுவதில்தான் குறியாக இருந்தார். காரணம், கிராமங்களில்தான் பெரும்பாலும் தாழ்த்தப்பட்டவர்களும், பிற்படுத்தப்பட்ட வர்களும் படிக்கக்கூடியவர்கள்.
இரண்டு முறையும் அவரைப் பதவியிலிருந்து விரட்டியவர் தந்தை பெரியார்அவர்கள்தான். 1952 இல் குலக்கல்வி திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தி அப்பன்தொழிலைப் பிள்ளைகள் கற்கவேண்டும் என்று ஆணை பிறப்பித்தமகானுபாவரும் அவரேதான்.
தீப்பந்தமும், தீப்பெட்டியும் தயாராக இருக்கட்டும் என்று தந்தை பெரியார்அவர்கள் ஆணையிட்ட பிறகே, தனக்கு உடல்நலம் சரியில்லை என்று கூறிமுதலமைச்சர் பதவியை விட்டு விலகினார் என்ற வரலாறுகள் எல்லாம் - தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களுக்குச்சொல்லிக் கொடுப்பதில்லை.
வைக்கத்திலே தீண்டாமையை ஒழிக்க தந்தை பெரியார் எப்படியெல்லாம்பாடுபட்டார் என்பதுகூட நம் பாடத் திட்டங்களில் இடம்பெறுவது இல்லை.
மாணவர்களிடையே நடந்த இந்த ஜாதி மோதலுக்குப் பிறகாவதுபாடத்திட்டத்திலே சமூகச் சீர்திருத்தம், தீண்டாமை, ஜாதி ஒழிப்புப்பற்றியபாடங்களைச் சொல்லிக் கொடுக்க ஏற்பாடு செய்யப்படவேண்டும்.
கிராமப்பகுதிகளிலே ஜாதியை வளர்க்கும் அமைப்புகள் ஊர் நாட்டாமைகள்இன்னும் இருக்கின்றன. இந்தப் பகுதியிலிருந்து கல்லூரிகளுக்கும் படிக்க வரும்மாணவர்கள் அந்தத் தொற்று நோயைச் சுமந்து வருகிறார்கள். எனவே, இதன்மூலத்தையும் அறிந்து அதில் கைவைக்க வேண்டும்.
இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு, இட ஒதுக்கீடு கொடுப்பதால்தான்ஜாதி வளர்கிறது என்கிற ஒன்றைக் கிளப்பிட முயலுகிறார்கள்.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) சார்பில் சென்னையில் இதுகுறித்துநடத்தப்பட்ட பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய மாநில வழக்கறிஞர்கள்சங்கத் தலைவர் ஒருவர் - தலித் மாணவர்களுக்கு மாநில அரசு இட ஒதுக்கீடுகொடுத்து ஒதுக்கி வைத்துவிட்டது (தீக்கதிர், 26.11.2008, பக்கம் 6) என்றுகுற்றப்பத்திரிகை படித்துள்ளார்.
இட ஒதுக்கீடு என்பது உரிமைகள் வாய்ப்புகள் மறுக்கப்பட்ட மக்களுக்குஅளிக்கப்படும் உதவியே தவிர, ஜாதியை வளர்ப் பதற்கான கூறு அல்ல. இடஒதுக்கீடு விஷயத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கை - அணுகுமுறை மாறி யிருக்கிறதா? என்று தெரியவில்லை.
அதேபோல, சட்டக்கல்லூரி மாணவர்கள் தொடர்பான வழக்கு ஒன்றில் சென்னைஉயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி அவர்கள், நுழைவுத் தேர்வு முறை தேவைஎன்ற ஒரு யோசனையைக் கூறியிருக்கிறார். -
நுழைவுத்தேர்வு வைத்து மாணவர்களைத் தேர்வு செய்த நேரத்தில், சட்டக்கல்லூரி மாணவர்கள் மத்தியிலே தகராறுகள், அடிதடிகள் நடக்கவில்லையா?
ஒரு அரசு சட்டம் இயற்றி, நீதிமன்றமும் ஒப்புக்கொண்ட ஒன்றைஉயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி மறுதலித்துப் பேசுவது நியாயமும் அல்ல, நீதியும் அல்ல.
மனித உணர்வுக்கும், உறவுக்கும் ஜாதி தீங்கானது என்பதை மாணவச் சமுதாயம்உணர்ந்திட வேண்டும்.
படிப்பது - பகுத்தறிவை வளர்ப்பதற்கேயன்றி, பிளவுபடுத்தும் ஜாதிச்சாக்கடையில் வீழ்வதற்கல்ல
கருத்துகள்