ஜெயலலிதா எழுதிய கடிதம் பற்றி கண்ணீர்க் கட்டுரை வெளியிட்டுள்ள விகடன் இதழ், அடேடே

சிந்தனை செய் மனமே!

சி.பி.எம். கட்சியின் "இன்றைய" நிலைபற்றி
கலைஞர் அவர்களின் கேள்வி பதில்

கேள்வி: பிரதமர் இந்திரா காந்தி அம்மையாருக்கு ஜெயலலிதா எழுதிய கடிதம் பற்றி கண்ணீர்க் கட்டுரை வெளியிட்டுள்ள விகடன் இதழ், அடேடே; ஜெயலலிதாவை எந்த அளவுக்குத் தூக்கிப் பிடித்திருக்கிறது பார்த்தீரா?

கலைஞர்: அன்னை இந்திரா காந்திக்கு ஜெயலலிதா எழுதிய கடிதம் எம்.ஜி.ஆர். அவர்கள் சென்னை மருத்துவமனையில் நோயுற்றுப் படுத்திருந்தபோது!

இதே ஜெயலலிதா, எம்.ஜி.ஆர். அவர்கள் அமெரிக்காவில் சிகிச்சை முடிந்து சென்னை வந்த பிறகு, அன்றைய பிரதமர் ராஜிவ்காந்தி அவர்களுக்கு ஒரு கடிதம் எழுதினாரே - அந்தக் கடிதத்தில் தானே, எம்.ஜி.ஆர். தனது செல்வாக்கு வளருவது கண்டு பொறாமைப்படுகிறார் என்றும் - இனி அவர் முதல்வராக இயங்க முடியாதென்றும் - தன் கைப்படவே ஆங்கிலத்தில் ஒரு கடிதம் எழுதி; அக்கடிதம் மக்கள் குரல் பத்திரிகையில் கூட பிளாக் செய்து விளம்பரப்படுத்தப்பட்டிருந்ததே; விகடன் அந்தக் கடிதம் பற்றி அறியவில்லை போலும்.

கேள்வி: சட்டக் கல்லூரி கலவரம் வன்முறை பற்றி ஓய்வு பெற்ற நீதிபதி விசாரணை நடத்தினால் போதாது என்றும், பதவியில் இருக்கிற உயர்நீதிமன்ற நீதிபதி விசாரிக்கவேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர்கள் கருத்தறிவித்து இருக்கிறார்களே?

கலைஞர்: மேற்கு வங்காள அரசு, நந்திகிராம நிகழ்ச்சியில் போலீசாரின் துப்பாக்கிக் குண்டுக்கு பலியானவர்கள் பதினான்கு பேர் என்று அந்த மாநில சட்டமன்றத்திலேயே அரசின் சார்பில் ஒப்புக் கொள்ளப்பட்டதே; அதற்கும், சுப்ரீம் கோர்ட்டில் பதவியிலிருக்கும் நீதிபதி மூலம் விசாரணை நடத்திட முன் வருமா? அதைப் போலவே சிங்கூர் சிறப்பு பொருளாதார மண்டலப் பிரச்சினையில் 18-12-2006 அன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த தெமாலிக் மற்றும் கதித்தத்தா ஆகியோர் விவசாய நிலத்தைப் பாதுகாப்போம் இயக்கத்தைச் சேர்ந்த தபசி மாலிக் என்ற பெண்ணை கற்பழித்து கொலை செய்த சம்பவம் குறித்து பதவியிலே உள்ள நீதிமன்ற நீதிபதியைக் கொண்டு விசாரணைக் கமிஷன் அமைத்திட தமிழக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் பரிந்துரை செய்ய முன்வருவார்களா? அப்படி நடைபெற்றால் அதைப் பாராட்டிவிட்டு - அதன் பிறகு தமிழகத்திலே அவர்களின் யோசனையைப் பரிசீலிக்கலாம்.

கேள்வி: அண்மையில் நடைபெற்று முடிந்த சட்டமன்றக் கூட்டத் தொடரை நான்கே நாட்களில் சுருக்கிவிட்டதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் என். வரதராசன் அறிக்கை விடுத்துள்ளாரே?

கலைஞர்: இதுவரை எந்த ஆண்டிலும் அக்டோபர், நவம்பர் திங்களில் சட்டமன்றம் கூடும்போது பொதுவாக நான்கு நாட்கள்தான் மன்றம் நடைபெறும். அவையை எத்தனை நாள் நடத்துவது, என்னென்ன நாட்களில் எந்தப் பொருளை விவாதத்திற்கு எடுத்துக் கொள்வது என்பது பற்றியெல்லாம் சட்டமன்றம் தொடங்கும் முதல் நாள் அன்று அலுவல் ஆய்வுக் குழு கூடி முடிவு செய்யும். அலுவல் ஆய்வுக் குழுவில் சட்ட மன்றத்தில் உள்ள அனைத்துக் கட்சித் தலைவர்களும் கலந்து கொண்டு முடி வினை எடுத்து, அதன்படிதான் நிகழ்ச்சி கள், விவாதங்கள் நடைபெறும்.

16-11-2008 அன்று அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டம் நடைபெற்ற போது - தோழமைக் கட்சியினரும், எதிர்க்கட்சி யினரும் சட்டப் பேரவையை நான்கு நாட்கள் என்பதற்குப் பதிலாக அய்ந்து நாட்கள் நடத்த வேண்டுமென்று விரும்பினார்கள். அத்தனை நாட்கள் விவாதிப்பதற்கான பொருள்கள் இல்லை என்ற போதிலும் - மற்றவர்கள் விரும்புகிறார்கள் என்பதற்காக அய்ந்து நாட்கள் அவையை நடத்தவும் உடனே ஒப்புக் கொண்டோம். அவ்வாறே பேரவை அய்ந்து நாட்கள் நடைபெற்றது.

சட்டமன்றக் கூட்டத் தொடர் நான்கு நாள்களாகச் சுருக்கப் படவில்லை. நான்கு நாள்கள் என்பது அய்ந்து நாள்களாக அலுவல் ஆய்வுக் குழுவிலே மற்றவர்கள் கேட்டுக் கொண்ட காரணத்திற்காகவே நீட்டிக்கப்பட்டதே தவிர சுருக்கப்பட வில்லை. அது மாத்திரமல்ல, மசோதாக்கள் விவாதிக்கப்பட்ட நேரத்தில் அவையை மேலும் ஒரு நாள் நீட்டிப்பு செய்ய வேண்டுமென்று எந்தக் கட்சியின் சார்பிலும் கோரப்படவும் இல்லை. அப்பொழுது சும்மா யிருந்துவிட்டு தற்போது வெளியே போய் மாநிலச் செயற்குழுவினைக் கூட்டி முடிவெடுத்து, அதனை எனக்குக் கடிதமாக எழுதியதோடு ஏடுகளில் வெளியிடச் செய்திருக்கிறார்கள்.

கேள்வி: சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட நிதி நிலை துணை அறிக்கையின்மீது கூட கட்சிக்கு ஒரு பிரதிநிதி மட்டுமே பேச அனுமதிக்கப்பட்டார்கள் என்று மார்க்சிஸ்ட் கட்சி சொல்லியிருக்கிறதே?

கலைஞர்: நான் அருமை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நண்பர்களை தோழமை உணர்வோடு கேட்டுக் கொள்கிறேன் - கடந்த கால ஆட்சிகளில் நிதி நிலை துணை அறிக்கையின் மீது ஒரு கட்சியின் சார்பில் எத்தனை பேர் பேச அனுமதிக்கப்பட்டார் கள்? அது மாத்திரமல்ல, எத்தனை முறை விவாதமின்றியே நிதி நிலை துணை அறிக்கை நிறைவேற்றப்பட்டது என்பதையெல் லாம் நாடு நன்கறியுமே? ஓ! அது அந்த ஆட்சிக் காலமோ? மன்னிக்கவும்.

கேள்வி: ஒரே நாளில் 19 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்ட தாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூறுகிறதே?

கலைஞர்: ஜெயலலிதாவின் ஆட்சிக் காலத்தில் 10-5-2002 அன்று ஒரே நாளில் 21 மசோதாக்களும், 31-7-2004 அன்று ஒரே நாளில் 23 மசோதாக்களும் - அதாவது 40 நிமிட நேரத்தில் எந்தவொரு எதிர்க் கட்சியும் பேச வாய்ப்பளிக்காமல் நிறை வேற்றப்பட்டுள்ளன. ஆனால் அப்போதெல்லாம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஜனநாயகம் பாழ்படுத்தப் பட்டதாகத் தெரியவில்லை. இப்போது தெரிகிறது. சிந்தனை செய்மனமே! சீறுவதோ தினமே!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மூக்கறுப்பு கல்வெட்டு பேளூர் சேலம் மாவட்டம்

செக்ஸ் படங்களையும் அனுமதிக்கலாம்!-கமல்

பெரியார் மருந்தியல் மகளிர் கல்லூரி ;கல்லூரி வளாகத்தில் ஆராய்ச்சிக்குப் பயன்படும் வகையில் சுமார் 200 வகையான மூலிகைச் செடிகளை உடைய மூலிகைப் பண்ணை