உளவு முன்னெச்சரிக்கை வராதது ஏன்?மும்பை நகரம் மீண்டும் ஒருமுறை பயங்கரவாதத் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.


2001
ஆம் ஆண்டு நமது நாடாளுமன்றத்தின் மீது நடந்த பயங்கரவாதத் தாக்குதலிற்குப் பிறகு இரண்டாவது பெரிய பயங்கரவாதத் தாக்குதல் மும்பையில் நடந்துள்ளது.

இந்தியாவின் நிதித் தலைநகரான மும்பை நகரம் மீண்டும் ஒருமுறை பயங்கரவாதத் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. சத்ரபதி சிவாஜி இரயில் நிலையம், தாஜ், டிரைடண்ட் நட்சத்திர விடுதிகள், நாரிமேன் மாளிகை, வில்லே பார்லே, மெட்ரோ திரையரங்கு ஆகியன உட்பட 9 இடங்களை குறிவைத்து நேற்று இரவு புகுந்த பயங்கரவாதிகள் நடத்திய கண்மூடித்தனமான தாக்குதலில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்,187க்கும் அதிகமானோர் காயமுற்றுள்ளனர்.

தாஜ் நட்சத்திர விடுதியில் தங்கியிருந்த சில நாடாளுமன்ற உறுப்பினர்கள், அந்நிய நாட்டு முக்கிய நபர்கள் ஆகியோர் உள்ளிட்ட பலரை பயங்கரவாதிகள் பிணையமாக பிடித்துவிட்ட நிலையில், அவர்களை மீட்க விடுதிக்குள் புகுந்து அதிரடித் தாக்குதல் நடத்திய மும்பை காவல் துறை அதிகாரி கார்க்கரே உட்பட 3 அதிகாரிகளும், 11 காவலர்களும் கொல்லப்பட்டுள்ளனர்.

இதுதவிர மற்ற இடங்களில் நடந்த மோதல்களில் அசோக் காம்தே, விஜய் சலாஸ்கார் உள்ளிட்ட அதிகாரிகளும், மேலும் பல காவலர்களும் உயிரிழந்துள்ளனர். பயங்கரவாதிகளில் 5 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

ஏ.கே.47 துப்பாக்கிகளுடனும், கையெறி குண்டுகளுடனும் இத்தாக்குதலை பயங்கரவாதிகள் நடத்தியுள்ளனர். மிரண்டுபோன மும்பை மக்களை வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று காவல் துறை கட்டுப்பாடு விதிக்கும் அளவிற்கு நிலைமை அபாயகரமாக உள்ளது.

உளவு முன்னெச்சரிக்கை வராதது ஏன்?

இவ்வளவு பெரிய அளவிற்கு தாக்குதல் நடத்த வேண்டுமெனில் இது நிச்சயம் நீண்ட கால சதித் திட்டமாகவே இருக்க வேண்டும். ஆனால், இது குறித்த உளவு எச்சரிக்கை ஏதும் வழங்கப்பட்டதாகத் தெரியவில்லை.

2006
ஆம் ஆண்டு மும்பை புறநகர் இரயில் குண்டுவெடிப்புகள், மாலேகான் குண்டுவெடிப்பு என்று பல்வேறு தாக்குதல்களில் ஈடுபட்ட பயங்கரவாதிகளை, அமைப்புகளை கண்டறிந்து தீவிர புலனாய்வில் மும்பை காவல் துறையின் பயங்கரவாத தடுப்புப் பிரிவு ஈடுபட்டுவந்த நேரத்தில் இந்த பயங்கரத் தாக்குதல் நடைபெற்றுள்ளது கவனிக்கத்தக்கது.

பெங்களூருவில் இருந்து தொடங்கி, ஜெய்ப்பூர், அகமதாபாத், டெல்லி, பிறகு சமீபத்தில் அஸ்ஸாம் என்று இந்தியாவின் பல மாநிலங்களில் அடுத்தடுத்து நடந்த குண்டு வெடிப்புகளில் பலர் உயிரிழந்த அதிர்ச்சியில் இருந்து நாடு மீள்வதற்குள் இந்த பயங்கரவாதத் தாக்குதல் நடந்துள்ளது எதைக் குறிக்கிறது என்றால், இன்னமும் பயங்கரவாத நடவடிக்கைகளை முன்னறிந்து (உளவறிந்து) தடுக்கும் திறனை நமது உளவு அமைப்புகள் பெறவில்லை என்பதே.

இவ்வளவு பெரிய தாக்குதல் நடைபெறும் என்று ஒரு சிறிய எச்சரிக்கை கூட வராத காரணத்தினால், மும்பை காவல் அமைப்பின் திறனையும் தாண்டி, மக்களுக்கும், காவலர்களுக்கும் பெரும் பாதிப்பு ஏற்படுவதை தடுக்க முடியாமல் போய்விட்டது. எனவே இது நமது உளவு அமைப்பின் மிகப் பெரிய தோல்வியாகும். அதன் திறன் கிரீடத்தில் பதிந்த மற்றொரு தோல்விச் சிறகாகும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தந்தை பெரியாரும், சுயமரியாதை இயக்கமும் தோன்றுவதற்கு முன்... மனித சமத்துவப் போராட்ட முன்னோடிகள்

பிரபாகரன் என்ற பெயரை சொல்லக்கூடாதா? எனது நாக்கை வெட்டிக் கொள்வேனடா திரைப்பட இயக்குனர் பாரதிராஜா

செக்ஸ் படங்களையும் அனுமதிக்கலாம்!-கமல்