பூரி ஜெகன்னாதன் கோவிலில் பணம் கையாடல்; இஸ்லாமியப் பெண் கண்டுபிடித்தார்
பூரி ஜெகன்னாதன் கோவிலில் பணம் கையாடல்
இஸ்லாமியப் பெண் கண்டுபிடித்தார்
இந்து மதக் கோவில் ஒன்றில் கோடிக்கணக்கில் பணம் கையாடல் செய்யப்பட்டிருப்பதை இஸ்லாமியப் பெண் ஒருவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விவரங்களைப் பெற்று கண்டுபிடித்துள்ளார்.
ஒரிசா மாநிலம் பூரி மாவட்டத்தில் பூரி ஜெகன்னாதர் கோவிலில் இருந்து 50 கி.மீ. தொலைவில் உள்ள காகத்பூர் என்ற இடத்தில் மா மங்களதேவி கோவில் உள்ளது. பூரி ஜெகன்னாதர் கோவிலுக்கு வந்து செல்லும் பக்தர்கள் அனைவரும் இக் கோவிலுக்கும் தவறாமல் வந்து செல்வது வழக்கம். இக்கோவிலுக்கு பக்தர்கள் காணிக்கையாக கோடிக்கணக்கில் பணத்தைக் கொட்டிவருகின்றனர். மேலும் ஏராளமான விளைநிலங்களும் இந்தக் கோவிலுக்குச் சொந்தமாக இருக்கின்றன. அதன் மூலமும் ஏராளமாகப் பணம் வருகிறது.. இந்தப் பகுதி மக்களுக்கோ, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கோ கோவில் நிர்வாகம் எந்த வசதியையும் செய்து தரவில்லை.
இதில் பெரும் மோசடி நடப்பதாக சந்தேகப்பட்ட அந்தப் பகுதி மகளிர் தன் உதவிக்குழுத் தலைவி நர்கீஸ் பாகர் (42) என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கோவிலின் வரவு செலவு கணக்குளைக் கேட்டறிந்தார். இஸ்லாமியப் பெண்ணான உனக்கு ஏன் இந்த வேலை என்று சிலர் கூறினாலும், மக்களின் பணம் மக்களுக்காகச் செலவழிக்கப்படாமல் மோசடி செய்யப்படுகிறது என்று கூறிய நர்கீஸ் தொடர்ந்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெற்ற விவரங்களை ஆராய்ந்தார்.
இதில் ரூ 1. 3 கோடி அளவிற்குக் கோவில் பணம் மோசடி செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது. இது குறித்து நர்கீஸ் முறையிட்டதன் பேரில் விசாரணை நடக்கத் தொடங்கியிருக்கிறது. முதல்கட்டமாக கோவில் நிருவாக அலுவலர் மொகந்தி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். பணம் கையாடல் குறித்து காவல்துறை விசாரித்து வருகிறது
கருத்துகள்