விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் பிறந்த நாள் உரை ;உலக நாடுகள் எம்மீதான தடையை நீக்க வேண்டும்; இந்தியாவுடன் நட்புறவு!
உலக நாடுகள் எம்மீதான தடையை நீக்க வேண்டும்; இந்தியாவுடன் நட்புறவு!
விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் பிறந்த நாள் உரை
எம்மை தடை செய்துள்ள நாடுகள், எமது மக்களது அபிலா சைகளையும் ஆழமான விருப்பங்களையும் புரிந்துகொண்டு, எம்மீதான தடையை நீக்கி, எமது நீதியான போராட்டத்தை அங்கீகரிக்கவேண்டும் என்றும் இந்தியப் பேரரசுடனான அறுந்துபோன எமது உறவுகளை நாம் மீளவும் புதுப்பித்துக் கொள்ள விரும்புகிறோம் என்றும் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
வேலுப்பிள்ளை பிரபாகரன் இன்று வியாழக்கிழமை ஆற்றிய மாவீரர் நாள் உரை:
இன்று மாவீரர் நாள்.
தமிழீழத் தாய்நாட்டின் விடிவிற்காகத் தமது இன்னுயிரை ஈகம் செய்து, எமது இதயமெல்லாம் நிறைந்து நிற்கும் எம்முயிர் வீரர்களை நாம் நினைவு கூர்ந்து கவுரவிக்கும் புனித நாள். ஆண்டாண்டு காலமாக அந்நிய ஆதிக்கப் பிடிக்குள் அடங்கிக் கிடந்த எமது தேசத்தை, ஆக்கிரமிப்பாளர்களுக்கு அடிபணியாத அடங்கா மண்ணாக மாற்றிவிட்ட எமது வீரமறவர்களைப் பூசித்து வணங்கும் திருநாள்.
எமது மாவீரர்கள் இந்த மண்ணை ஆழமாக நேசித்தார்கள். தாயக விடுதலைக்காகத் தமது கண்களைத் திறந்த கணம் முதல் நிரந்தரமாக மூடிய கணம் வரை அவர்கள் புரிந்த தியாகங்கள் உலக வரலாற்றில் ஒப்பற்றவை. எந்த ஒரு தேசத்திலும் எந்த ஒரு காலத்திலும் நிகழாத அற்புதமான அர்ப்பணிப்புக்களை எமது மண்ணிலே எமது மண்ணுக்காக எமது மாவீரர்கள் புரிந்திருக் கிறார்கள். இந்த மண்ணிலேதான் எமது மாவீரர்கள் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்தார்கள். இந்த மண்ணிலேதான் அவர்களது பாதச்சுவடுகள் பதிந்திருக்கின்றன. அவர்களது மூச்சுக்காற்றும் கலந்திருக்கிறது. இந்த மண்ணிலேதான் எமது இனம் காலாதி காலமாக,கொப்பாட்டன், பாட்டன் என தலைமுறை தலை முறையாக வாழ்ந்து வருகிறது.
மண் ஆசை பிடித்து, சிங்களம் அழிவு நோக்கிய இராணுவப் பாதையிலே இறங்கியிருக்கிறது. உலகத்தையே திரட்டி வந்து எம்மோடு மோதுகிறது. இராணுவ வெற்றி பற்றிய கனவுலகில் வாழ்கிறது. சிங்களத்தின் இந்தக் கனவுகள் நிச்சயம் கலையும். எமது மாவீரர் கண்ட கனவு ஒருநாள் நனவாகும். இது திண்ணம். தனது முழு படை பலத்தையும் ஆயுத பலத்தையும் ஒன்று திரட்டி, தனது முழுத் தேசிய வளத்தையும் ஒன்றுகுவித்து, சிங்கள தேசம் எமது மண் மீது ஒரு பாரிய படையெடுப்பை நிகழ்த்தி வருகிறது. சிங்கள இனவாத அரசு ஏவிவிட்டிருக்கும் இந்த ஆக்கிர மிப்புப் போரை எதிர்த்து, எமது விடுதலை வீரர்கள் வீராவேசத் தோடு போராடி வருகின்றனர். உலகின் பல்வேறு நாடுகளும் தமிழ் இன அழிப்புப் போருக்கு முண்டுகொடுத்து நிற்க, நாம் தனித்து நின்று, எமது மக்களின் தார்மீகப் பலத்தில் நின்று, எமது மக்களின் விடிவிற்காகப் போராடி வருகிறோம். சமாதானத்துக்கு நாம் எப்போதும் தயார்
தவிர்க்கமுடியாத தேவையின் நிர்ப்பந்தமாக ஆயுதப் போராட்டத்தை வரித்துக்கொண்ட போதும், நாம் எமது மக்களின் தேசியப் பிரச்சினைக்குப் போரை நிறுத்தி, அமைதி வழியில் தீர்வுகாணவே விரும்புகிறோம். இதற்கு எமது விடுதலை இயக்கம் என்றுமே தயாராக இருக்கிறது. நாம் சமாதான வழிமுறைகளுக்கு என்றுமே எதிரானவர்கள் அல்லர். அதேநேரம், நாம் சமாதானப் பேச்சுக்களிற் பங்குபற்றத் தயங்கியதும் இல்லை. பேச்சு என்ற போர்வையில், சிங்கள அரசு தமிழர் தேசம் மீது ஒரு பெரும் படையெடுப்பிற்கான ஆயத் தங்களைச் செய்தது. போர் ஓய்வையும் சமாதானச் சூழலையும் பயன்படுத்தி, தனது நலிந்து போன பொருளாதாரத்தை மீளக்கட்டி, தனது சிதைந்துபோன இராணுவப் பூதத்தை மீளவும் தட்டியெழுப்பியது.
இது தமிழருக்கு எதிரான போர்; தமிழ் இனத்திற்கு எதிரான போர்; தமிழின அழிப்பை இலக்காகக் கொண்ட போர்; மொத்தத்தில் இது ஓர் இன அழிப்புப் போர். இந்தப் போர் எமது மக்களைத்தான் பெரிதும் பாதித்திருக்கிறது. பாதைகளை மூடி, உணவையும் மருந்தையும் தடுத்து, எமது மக்களை இறுக்கமான இராணுவ முற்றுகைக்குள் வைத்துக்கொண்டு, கண்மூடித்தன மான குண்டு வீச்சுக்களையும் எறிகணை வீச்சுக்களையும் நடத்தி வருகிறது. சொந்த நிலத்தை இழந்து, அந்த நிலத்தில் அமைந்த வாழ்வை இழந்து, அகதிகளாக அலையும் அவலம் எம் மக்களுக்குச் சம்பவித்திருக்கிறது. உலக நாடுகளுடனும், இந்தியாவுடனும்
நட்புறவு கொள்ள விரும்புகிறோம்
எமது இயக்கமும் சரி எமது மக்களும் சரி என்றுமே உலக நாடுகளுடனும் எமது அண்டை நாடான இந்தியாவுடனும் நட்புறவை வளர்த்துச் செயற்படவே விரும்புகிறோம். இதற்கான புறநிலைகளை உருவாக்கி, நட்புறவுப் பாலத்தை வளர்த்துவிடவே சித்தமாக இருக்கிறோம். எமது நல்லெண்ணத்தை வெளிப்படுத்தி, காத்திரமான உறவுகளைக் கட்டியெழுப்புவதற்குக் காத்து நிற்கிறோம். எம்மை தடைசெய்துள்ள நாடுகள், எமது மக்களது அபிலாசைகளையும் ஆழமான விருப்பங்களையும் புரிந்து கொண்டு, எம்மீதான தடையை நீக்கி, எமது நீதியான போராட் டத்தை அங்கீகரிக்கவேண்டுமென அன்போடு வேண்டிக்கொள் கிறேன்.
இந்தியாவை நாம் ஒருபோதும் பகை சக்தியாகக் கருதிய தில்லை. இந்தியாவை எமது நட்புச் சக்தியாகவே எமது மக்கள் என்றும் கருதுகிறார்கள். எமது தேசியப் பிரச்சினை விசயத்தில் இந்தியப் பேரரசு ஒரு சாதகமான நிலைப்பாட்டை எடுக்கும் எனப் பெரிதும் எதிர்பார்க்கிறார்கள்.
தமிழக உறவுகளுக்கு நன்றி
காலமும் கடல் கடந்த தூரமும் எம்மைப் பிரிந்து நிற்கின்ற போதும், எமது மக்களின் இதயத்துடிப்பை நன்கறிந்து, தமிழகம் இந்தவேளையிலே எமக்காக எழுச்சிகொண்டு நிற்பது தமிழீழ மக்கள் அனைவருக்கும் எமது விடுதலை இயக்கத்திற்கும் பெருத்த ஆறுதலையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தியிருக்கிறது. எம் மக்களுக்காக ஆதரவுக் குரல் எழுப்பி, அன்புக்கரம் நீட்டும் தமிழக மக்களுக்கும் தமிழகத் தலைவர்களுக்கும் இந்தியக் தலைவர்களுக்கும் இந்தச் சந்தர்ப்பத்திலே எமது அன்பையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
போருக்கு குரல் கொடுக்கும் சிங்கள தேசம்
அன்பையும் அறத்தையும் போதித்த புத்த பகவானைப் போற்றி வழிபடும் அந்தத் தேசத்திலே இனக்குரோதமும் போர் வெறியும் தலைவிரித்தாடுகின்றன. அங்கு போர்ப் பேரிகைகளைத்தான் எம்மால் கேட்க முடிகிறது. போரை கைவிட்டு, அமைதி வழியில் பிரச்சினையைத் தீர்க்குமாறு அங்கு எவரும் குரல் கொடுக்க வில்லை. சிங்களத்தின் அரசியல்வாதிகளிலிருந்து ஆன்மீகவாதிகள் வரை, பத்திரிகையாளர்களிருந்து பாமர மக்கள் வரை போருக்கே குரல் கொடுக்கிறார்கள்.
தமிழர் தேசம் போரை விரும்பவில்லை. வன்முறையை விரும்ப வில்லை. அகிம்சை வழியில் அமைதி வழியில் நீதி வேண்டி நின்ற எம் மக்களிடம் சிங்கள தேசம்தான் போரைத் திணித்திருக்கிறது. தமிழரின் தேசியப் பிரச்சினை விசயத்தில், சிங்களம் அடக்கு முறை என்ற ஒரே பாதையில்தான் சென்றுகொண்டிருக்கிறது. இராணுவ வன்முறைப் பாதையைக் கைவிட்டு, சிங்களம் நீதி வழங்கும் என எமது மக்கள் வைத்திருந்த சிறிய நம்பிக்கையும் இன்று அடியோடு அழிந்துவிட்டது. சிங்கள தேசத்திலே கடந்த அறுபது ஆண்டுகளாக நிகழாத அரசியல் மாற்றம் இனிவரும் காலங்களில் நிகழ்ந்துவிடப் போவதுமில்லை, அப்படி நம்பி ஏமாறுவதற்கு எமது மக்களும் தயாராக இல்லை.
புலம்பெயர் இளைய சமுதாயத்துக்கு பாராட்டு
இந்த வரலாற்றுச் சூழமைவில், தமிழர் உலகின் எந்த மூலையில் வாழ்ந்தாலும் எந்தக் கோடியில் வளர்ந்தாலும் எமது தேச விடுதலைக்கு உறுதியாகக் குரலெழுப்பி, எமது கரங்களைப் பலப்படுத்துமாறு அன்போடு வேண்டுகி றேன். சத்திய இலட்சியத் தீயில் தம்மையே அழித்துச் சரித்திரமாகி விட்ட எமது மாவீரர்கள் வழியில் சென்று நாம் எமது இலட் சியத்தை அடைவோமென உறுதியெடுத்துக்கொள்வோமாக.
- இவ்வாறு வே. பிரபாகரன் மாவீரர் நாள் உரையில் தெரிவித்துள்ளார்.
கருத்துகள்