என்னை சாதனையாளர் என்று குறிப்பிடு வதை விட, நான் பல சோதனைகளைக் கண்டவன் -கலைஞர்

எனது உச்சக்கட்ட சாதனை:

மனிதனாகவே வாழ முடியாத அநீதிக்குத் தள்ளப்பட்ட
அருந்ததியர்க்கு அளிக்கும் இட ஒதுக்கீடே!

முதல்வர் கலைஞர் பெருமிதம்

- சென்னை சாந்தோம் கலைவிழா மன்றம் சார்பில் 2008 ஆம் ஆண்டிற்கான வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கும் விழா நேற்று மாலை சாந்தோமில் நடைபெற்றது.

இவ்விழாவில் வாழ்நாள் சாதனையாளர் விருதினைப் பெற்ற முதல்வர் கலைஞர் தனது ஏற்புரையில், என்னுடைய சாதனை கள் ஒன்று, இரண்டு . . . என்று வரிசைப்படுத்தித் தொடர்ந்தாலும் கூட, என்னுடைய உணர்விற்கு ஏற்ப, தமிழர்கள் உண்மை யிலேயே வாழ்த்துவதற்கேற்ப அமைந்தது எந்தச் சாதனை என்றால் அது இலங்கைத் தீவிலே தமிழன் அமைதியாக வாழ ஒரு வழி கண்டாகிவிட்டது என்ற அந்தச் செய்திதான் நான் முதன் மையாகவும், கடைசியாகவும் செய்கின்ற சாதனை என்றும் குறிப்பிட்டார்.

மேலும் அவர் பேசுகையில், மனிதனாகவே வாழ முடியாத நிலையில் உள்ள அருந்ததியர்களுக்கு சமூக நீதி அளித்தேன் என்ற அந்தச் சாதனை முற்றுப் பெறவிருக்கிறது என்று குறிப்பிட்டார்.

நேற்று அவர் ஆற்றிய உரை வருமாறு:

இன்றைய தினம் வாழ்நாள் சாதனையாளர் விருது எனக்கு வழங்கப்பட்டிருக்கின்றது. இந்தச் சாந்தோம் கலை விழா மன்றம் என்னைப் பெருமைப்படுத்தி இருக்கிறது. ஊக்கம் வழங்கி யிருக்கின்றது. உற்சாகம் வழங்கியிருக்கின்றது. அதற்கான என்னுடைய இதய நன்றியைத் தெரிவித்துக்கொள்ளக் கடமைப் பட்டிருக்கிறேன்.

இப்படி ஒரு விழாவிலே நான் கலந்து கொள்ள வேண்டு மென்று இங்கே தம்பி பீட்டர் அல்போன்ஸ் சொன்னதைப் போல - அவரும், அருள்திரு வின்சென்ட் சின்ன துரை அவர் களும், மற்றும் ஆயர் பெருமக்களும், என்னை அலுவலகத்திலே சந்தித்து கேட்டபோது, இந்த விழா பற்றிய விளக்கத்தை எனக்குச் சொன்னார்கள். வேறு ஒன்றுமில்லை. வாழ்நாள் சாதனையாளர் விருது உங்களுக்கு வழங்கப் போகிறோம், அதை நீங்கள் பெற்றுக் கொள்ள வேண்டும். உங்களை நாங்கள் பெருமைப்படுத்த நடத்துகின்ற நிகழ்ச்சியில், தாங்கள் கலந்து கொள்ள வேண்டு மென்று கேட்டார்கள்.

சோதனையாளன் நான்

நான் சொன்னேன். என்னை சாதனையாளர் என்று குறிப்பிடு வதை விட, நான் பல சோதனைகளைக் கண்டவன் என்ற முறை யில் சோதனையாளன் என்றே குறிப்பிடலாம். சாதனையாளர் விருது இப்போது எனக்கு வேண்டாம். விழாவை ஒத்தி வையுங்கள் என்று கேட்டுக் கொண்டேன்.

அது மாத்திரமல்ல. இப்படிப்பட்ட ஒரு சிறப்பான விழா, சீர்மிகு விழா, எழுச்சிமிகு விழா தமிழகத் தலைநகரத்தில் இந்நாளில் நடைபெறும்போது, அதிலே நான் கலந்து கொள்ள என்னுடைய மனம் ஒப்பவில்லை. அதற்குக் காரணம் விழா நடத்துகின்றவர்களைப் பற்றிய வேற்பாடான எண்ணம் அல்ல. விழா நடக்கின்ற இந்த நேரம், நம்முடைய தமிழன் வெட்டப் பட்டு, குத்தப்பட்டு, சுடப்பட்டு இலங்கைத் தீவிலே பிணமாகச் சாய்ந்து கொண்டிருக்கிறான். இந்த நேரத்திலே விழாவிலே கலந்து கொண்டு விருது பெறுவதை நான் சிறப்பாகக் கருத வில்லை. ஆகவே வேறொரு நாளில் வைத்துக் கொள்ளலாம் என்று எவ்வளவோ வேண்டிக் கேட்டுக்கொண்டேன்.

நான் வேண்டிக் கேட்டுக் கொண்டாலும், நான் கேட்டுக் கொண்ட அந்தப் பாணியை விட மிக அதிகமாக வேண்டிக் கேட் டுக் கொண்டு - என்னை இந்த விழாவிலே கலந்து கொள்ள வேண் டிய கட்டாயத்தை பீட்டர் அல்போன்சும், வின்சென்ட் சின்ன துரையும் மற்றும் ஆயர் பெருமக்களும் ஏற்படுத்திவிட்டார்கள்.

இலங்கைத் தமிழர்களுக்காக
ஒற்றுமையாகக் குரல் கொடுக்க வேண்டும்

என்னுடைய சாதனை, என்னுடைய உணர்விற்கு ஏற்ப, தமிழர்கள் உண்மையிலேயே வாழ்த்துவதற்கு ஏற்ப அமைந்தது அந்தச் சாதனை என்று சொன்னால், அது இலங்கைத் தீவிலே தமிழன் அமைதியாக வாழ ஒரு வழி கண்டாகிவிட்டது என்ற அந்தச் செய்திதான் நான் முதன்மையாகவும், கடைசியாகவும் செய்கின்ற சாதனை என்பதை உங்களுக்கு நான் இந்த நேரத்தில் எடுத்துக் காட்டக் கடமைப்பட்டிருக்கிறேன்.

அந்தச் சாதனை புரியாமல், இந்தச் சாதனைகளுக்கு எல்லாம் நான் விருது பெறுவது என்பது ஏற்புடையதல்ல. பொருத்த முடையதும் அல்ல. ஏனென்றால் ஒரு இனமே, பக்கத்திலே இலங் கைத் தீவிலே அழிக்கப்படுகிறது. இந்த நிலை மாறினால் - மாறித் தீர வேண்டும், மாற்றப்பட வேண்டும், மாற்றுவதற்கு எல்லாத் தமிழர்களும், தமிழகத்திலே உள்ள மக்களும் உலகத் திலே வாழ்கிற தமிழர்களும் ஒற்றுமையாகக் குரல் கொடுக்க வேண்டும், அணி வகுக்கவேண்டும். அப்போதுதான் நீங்கள் இங்கே வழங்கு கின்ற வாழ்நாள் சாதனையாளர் விருதுக்கு பெருமை, சிறப்பு, பொருத்தம் என்று நான் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

கண்ணொளி வழங்கும் திட்டம்

அதன் காரணமாகத்தான் தமிழகத்தில், இந்தியாவிலே எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு, கண்ணொளி முகாம்கள், கிராமத்திற்கு கிராமம், ஆயிரக்கணக்கான கிராமங்களில் நடத்தப் பட்டு, இலட்சக்கணக்கான கண் பார்வை இழந்த மக்களுக்குக் கண்ணொளி வழங்கிய நிகழ்ச்சி - கண்ணொளித் திட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. அந்தத் திட்டம் கூட எப்படி என் சிந்தையிலே உதித்தது என்றால் - நானே விபத்து ஒன்றில் சிக்கி, கண் சிகிச்சைக்காக அமெரிக்க நாட்டிற்குச் சென்றிருந்தபோது - நான் தங்கியிருந்த மருத்துவமனைக்குப் பக்கத்தில் அந்த நாட்டு மருத்துவர்கள் ஒன்று கூடி, பல முனைகளில் ஏழை எளிய மக்களுக்கு கண்ணொளி வழங்குகின்ற திட்டத்தை நிறைவேற்றிக் கொண்டிருப்பதைக் கண்டேன்.

இத்தனை சாதனைகளும் - ஏழை எளிய மக்கள், நலிவுற்ற மக்கள், நலிந்த மக்கள், வாழ முடியாத மக்கள், வாழத் தெரியாத மக்கள், வாழ வழியில்லாத மக்கள் - அவர்களுக்காகச் செய்யப் பட்ட சாதனைகள். நன்கு வாழ்ந்து கொண்டிருக்கின்ற மக்களுக்குச் செய்வது சாதனை அல்ல. இப்போது எனக்கு ஒரு விருது அளித்து, ஒரு பதக்கம் கோக்கப்பட்ட சங்கிலியை அணிவிப்பது கூட இந்த மாமன்றத்தினுடைய சாந்தோம் கலை விழா மாமன்றத்தினுடைய சாதனையாக இருக்கலாம். அதை நான் பெறுவது கூட விருது பெற்றச்சாதனையாக இருக்கலாம்.

ஆனால் இந்தச் சாதனைகளுக்கெல்லாம் மேலான சாதனை தான், வயிறு ஒட்டியவனை வாழ வைக்கின்ற சாதனை. விழியற்ற வனைப் பார்க்க வைக்கின்ற சாதனை. வாய்பேச முடியாத ஊமையைப் பேச வைக்கின்ற சாதனை. அந்தச் சாதனைகளில் வரிசையில் இன்னமும் வாய்திறந்திருந்தாலுங்கூட, பேச முடியாத - அழுத்திப் பேச முடியாத - உரிமை இல்லாத - அடிமைத்தனம் மிகுந்த மக்கள் நாட்டிலே இருக்கின்றார்கள்.

கடைசியாக ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். ஒரு நல்ல செய்தியோடு இன்றைய நிகழ்ச்சியிலே நான் விடை பெறலாம் என்று விரும்புகிறேன். ஏற்கனவே உங்களுக்குத் தெரிந்திருக்கின்ற செய்தி. தமிழ்நாட்டில் சிறுபான்மையோருக்கு ஏழையெளி யோருக்கு பிச்சைக்காரர்களுக்கு ஊனமுற்றோருக்கு எல்லோ ருக்கும் ஒருவர் பாக்கியில்லாமல் அரசின் சார்பிலே நன்மைகள் பலவற்றைச் செய்திருந்தாலுங்கூட ஒரு பகுதி விடப்பட்டுள்ளது. ஒரு பகுதி கண்ணிருந்தும் குருடர்களாக - வாய் இருந்தும் பேச முடியாதவர்களாக - வாழ முடியாதவர்களாகவே மனிதர் களாகவே மதிக்கப் படாதவர்களாகவே ஒரு சமுதாயம் தமிழ் நாட்டிலே இருக்கிறது. இன்னமும் இருந்து வருகின்றது. அதைச் சொன்னால்தான் சில பேருக்கு நினைப்பே வருகிறது. அந்தச் சமுதாயத்தின் பெயர்தான் அருந்ததியர் சமுதாயம். அந்த அருந் ததியர் சமுதாயம் தங்களுக்கு தனி இட ஒதுக்கீடு வேண்டுமென்று கேட்டார்கள். அதற்கு நீதியரசர் ஜனார்த்தனம் குழு அமைக்கப் பட்டு அது குறித்த அறிக்கை தந்திருக்கிறது.

அந்த அறிக்கையை இன்னும் இரண்டொரு நாளில் கூடுகின்ற எங்களுடைய அமைச்சரவைக் கூட்டத்திலே ஆலோசித்து, விவா தித்து, அந்தச் சமுதாயத்திற்குத் தேவையான அருந்ததியர் சமுதாயத்திற்குத் தேவையான சலுகையை இந்த அரசு அளிக்க விருக்கிறது என்ற மகிழ்ச்சிகரமான செய்தியை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

நான் என்னுடைய சரித்திரத்தில் கடைசியாகவாவது - கடைசிப் பக்கத்தில் எழுத வேண்டிய - அச்சடிக்கப்பட வேண்டிய செய்தி, அருந்ததியர்களுக்கு சமூக நீதி அளித்தேன் என்ற அந்தச் செய்தி இடம் பெற வேண்டுமென்று சொன்னேன்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தந்தை பெரியாரும், சுயமரியாதை இயக்கமும் தோன்றுவதற்கு முன்... மனித சமத்துவப் போராட்ட முன்னோடிகள்

பெரியார் மருந்தியல் மகளிர் கல்லூரி ;கல்லூரி வளாகத்தில் ஆராய்ச்சிக்குப் பயன்படும் வகையில் சுமார் 200 வகையான மூலிகைச் செடிகளை உடைய மூலிகைப் பண்ணை

பிரபாகரன் என்ற பெயரை சொல்லக்கூடாதா? எனது நாக்கை வெட்டிக் கொள்வேனடா திரைப்பட இயக்குனர் பாரதிராஜா