சக்கரக்கட்டி நாமக்கட்டி திரை விமர்சனம்
சக்கரக்கட்டி
எல்.கே.ஜி காதலை தவிர, எல்லா காதலையும் பார்த்த தமிழ்சினிமாவுக்கு பணக்கார பசங்களின் 'பார்ஷ்' காதலை சொல்லியிருக்கிறது சக்கரக்கட்டி. விட்டால் நிலாவிலேயே ஒரு சீன் எடுத்து நிலாப்பிரபு ஆகியிருப்பார் இந்த கலாப்பிரபு. அந்தளவுக்கு பணத்தை வாரியிறைத்திருக்கிறார் பணக்கார அப்பா தாணு. காட்சிக்கு காட்சி காஸ்ட்லியாக டிசைன் பண்ணியிருக்கும் இயக்குனர், கதை விஷயத்தில் "பார்த்துக்கலாம்..." போக்கை கடை பிடித்திருப்பதுதான் ஷாக்.
கல்லு£ரி மாணவரான சாந்தனுவை இஷிதாவும், வேதிகாவும் விழுந்து விழுந்து காதலிக்கிறார்கள். ஆனாலும் வெற்றி என்னவோ இஷிதாவுக்குதான். காதலில் இடையிடையே எட்டிப்பார்க்கும் சந்தேக சைத்தான், இஷிதாவுக்குள்ளும் புகுந்து சிண்டு முடிய பார்க்க, ஊடல், கூடல் என்று கதை நகர்ர்ர்ர்ர்ர்ர்கிறது. கடைசிவரை தன்னை நம்பாத காதலிக்கு உண்மையை புரியவைக்க சாந்தனு எடுக்கிற முயற்சிகளும், மீண்டும் இஷி மனம் இளகினாரா என்பதும் கடைசி ரீல்.
அதிகம் வேலையில்லை சாந்தனுவுக்கு. அடிக்கடி பெருமுச்சு விடுவதும், இரண்டு காதலிகளை சமாளிப்பதுமே அவரது மற்றொரு வேலையாக இருக்கிறது. பாடல் காட்சிகளில் இன்றைய ஹீரோக்கள் பலருக்கும் சவால் விடுவது ஆறுதல். காம்பவுண்டின் அருகே நின்று காதலிக்கு தரிசனம் கொடுத்துவிட்டு, அடுத்த நொடியே வேறு கேட் வழியே ஓட்டமாக ஓடி, மற்றொரு கேட்டிலும் தரிசனம் தருகிற அந்த காட்சி இளமை துள்ளல். மொக்கை பிளேடு என்று நினைத்து தைரியமாக கையை கீறிக்கொண்டு, அது கொடுக்கும் 'ஷார்ப்' ட்ரீட்மென்ட்டில் விழி பிதுங்குவதும் இளசுகளின் உய்யலாலா...
ஒரு காட்சியில் சாந்தனுவின் நண்பன், "டேய் அந்த ஃபிகருக்கு இவ நல்லாயிருக்கா. இவளையே லவ் பண்ணிடேன்" என்கிறார். அந்த, 'நல்லாயிருக்கா' நடிகை வேதிகாதான். படத்தில் இவருக்கு கிடைப்பது என்னவோ காதல் தோல்வி. மற்றொரு புதுமுகம் இஷிதா. தமிழுக்கு பொறுத்தமில்லாத மும்பை முகம். அழுகிற காட்சிகளில் நடிக்கவும் தெரிந்திருக்கிறது. பாராட்டுகள்...
பட்டணத்து நாகரீகத்தை பேனா முழுக்க நிரப்பியிருக்கிறார் டைரக்டர் கலாப்பிரபு. வீட்டை விட்டு வெளியூர் கிளம்பும் அம்மா, தனது மகனிடமும், அவனது பிரண்ட்சுகளிடமும் "நோ வீடியோ, நோ பேட் ஹேபிட்ஸ்" என்று எச்சரித்துவிட்டே கிளம்புகிறார். லவ் பற்றி விவாதித்துக் கொண்டிருக்கும் மகளிடமும், அவளது தோழிகளிடமும் "நீங்க பேசிட்டு இருங்க" என்ற அசட்டு சிரிப்போடு அறையை விட்டு வெளியேறுகிறார் இன்னொரு அம்மா. வசனங்களில் பீறிடும் ஆங்கில மோகம், நகர இளைஞர்களின் நாகரீகம் என்றாலும், 'கொஞ்சம் குறைத்திருக்கலாமே' என்று முணுமுணுக்க வைக்கிறது.
ஒரு கம்பீர நாற்காலியோடு காதருகிலேயே உட்கார்ந்துவிட்டார் ஏ.ஆர்.ரஹ்மான். பாடல் காட்சிகள் வரும் நேரத்தில் கேன்ட்டீன் ஆசாமிகள் கடையை கட்டிவிட வேண்டியதுதான்! ரஹ்மானின் ஆர்மோனிய விரல்களுக்கு, மோதிரமாக அமைந்திருக்கின்றன, நடன அமைப்பும், கிராபிக்ஸ் யுக்திகளும்! ஆன்ட்ரூவின் ஒளிப்பதிவு மேலும் ஒரு சக்கரைக்கட்டி.
ஊட்டுவார்கள் என்று நினைத்தால், சர்க்கரையை காட்டுகிறார்கள்.
கருத்துகள்