ஏகன் தமிழ் பட விமர்சனம்
போலீஸ் அதிகாரி, ஒரு அசைன்மென்ட்டுக்காக மாணவன் ஆகிற கதை. அடிக்கிற ட்யூட்டியையும், படிக்கிற ட்யூட்டியையும் ஒரே நேரத்தில் கொடுத்து, 'தல'ய்க்கு பாரம் ஏற்றியிருக்கிறார் இயக்குனர் ராஜுசுந்தரம். அதில் கொஞ்சத்தை நமது தலைக்கும் டிரான்ஸ்பர் செய்கிறது திரைக்கதை. இதுதான் கொஞ்சம் 'ஜண்டுபாம்' ரகமே தவிர, மற்ற காட்சிகள் எல்லாம் மிரட்டல் கேம்!
இன்டர்நேஷனல் தாதா சுமனின் கூட்டாளி தேவன், ஒரு சந்தர்பாத்தில் சுமனுக்கு எதிராக அப்ரூவர் ஆகிவிடுகிறார். நீதிமன்றத்தில் ஒப்படைக்க போகும்போது தப்பிக்கும் அவர் மீண்டும் கிடைத்தால்தான் சுமனை உள்ளே தள்ள முடியும். தேட ஆரம்பிக்கிறது போலீஸ். தேவனின் மகள் பியா ஊட்டியில் உள்ள கல்லூரியில் படிக்கிறார். மகளை பார்க்க தேவன் அங்கு வருவார் என்பதை மோப்பம் பிடிக்கும் போலீஸ், அவரை பொறி வைத்து பிடிக்க அஜீத்தை அனுப்புகிறது. மாணவராக கல்லூரிக்குள் நுழையும் அஜீத்தின் அனுபவங்களும், அவஸ்தைகளும்தான் கதை.
ஜவ்வரிசி பாயாசத்தில் புளியங்கொட்டையை போட்ட மாதிரி துருத்திக் கொண்டு தெரிகிறார் மாணவர் அஜீத். ஆனால், இந்த அஜீரணத்தை பேலன்ஸ் பண்ணுகிறது ஜெல்லூசில் வசனங்கள்! "நான்தான் எனக்கு தொப்பைன்னு ஒத்துக்கிறனே..." என்று சொல்லும்போது, தலயின் சரண்டர் சல்யூட் அடிக்க வைக்கிறது. சண்டை காட்சிகளில் இதுவரை இல்லாத அளவுக்கு தோட்டாவாக பாய்கிறார் தல. பாடல் காட்சிகளில் இன்னும் பிரமாதம். ஒவ்வொரு மூவ்மென்டும் அஜீத்தின் உடலுக்குள் ராஜுசுந்தரத்தின் வேகமாக தெறிக்கிறது. முதல் பார்வையிலேயே நயன்தாராவிடம் அவுட் ஆகிவிடும் அஜீத்தின் கம்பீரமும், வழிகிற காதலும் தியேட்டரை துவம்சமாக்குகிறது.
அட, நயன்தாராவா இது? சுற்று சூழலா, அல்லது சொந்த சூழலா தெரியவில்லை. தாஜ்மஹாலுக்கு வெள்ளையடிக்க வேண்டிய நேரம் வந்திருச்சுய்யா வந்திருச்சு! திறந்து கிடக்கும் பின் முதுகோடு படம் நெடுகிலும் நடமாடுகிறார். சங்கப்பலகையில் பொறிக்கப்பட வேண்டிய இவரது தங்க பலகை முதுகு, இந்த படத்தில் 'பிளாக் போர்டாகி போச்சே' என்ற கவலைதான் எழுகிறது.
காதலை வெளிப்படுத்தாமலே காதலிக்கும் நவ்தீப்பிடம், "இன்னும் நீ ஐ லவ் யூ சொல்லலே" என்று ஞாபகப்படுத்தி வாங்கும் பியாவின் காதலில் பட்டாம்பூச்சியின் அழகு. கடத்தப்படும் இவரை பொறி பறக்கும் சண்டைக்குப் பின் அஜீத் மீட்டெடுப்பது கம்பீரம்.
ஜெயராம், சுமன் வகையறாக்கள் இடமாறு தோற்றப்பிழை. காமெடியில் சுமனும், சீரியஸ் காட்சிகளில் ஜெயராமுமாக மாறிப் போயிருக்கிறார்கள். நாசரின் அரவணைப்பில் வளர்ப்பு மகனின் பிளாஷ்பேக், கண்ணீர் சென்ட்டிமென்ட். சித்திகளின் மனசை சிக்கனமாக பார்வைகளாலேயே வெளிப்படுத்தி விடுகிறார் சுஹாசினி. அப்பளம் சுடுவது மாதிரி கூட இருக்கிற தடியன்களை போட்டுத்தள்ளும் சுமனின் வேகமும், அதை தொடர்ந்த அவரது அழுகையும் சீரியஸ் காமெடி!
அர்ஜுன் ஜெனாவின் ஒளிப்பதிவில் ஆங்கில படத்தின் கம்பீரம். யுவன்சங்கர் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் மயக்கம். அஜீத்தின், மாணவன் என்ட்ரி மாதிரியே அமைந்திருக்கிறது ராஜுசுந்தரத்தின், டைரக்டர் என்ட்ரியும்.
அறிமுக காட்சியில் 'gun'னோடு தோன்றுவதால் ஏகன் என்று டைட்டில் வைத்திருப்பார்கள் போலிருக்கிறது.
venkatesan
கருத்துகள்