கைவிடப்படுகிறது மர்ம யோகி? கமல் !


நிதிப் பிரச்சினையால் கமல்ஹாசனின் மர்மயோகி படம் கைவிடப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தசாவதாரத்தை முடித்த கையோடு கலைஞானி கமல்ஹாசன் திட்டமிட்டுள்ள படம் மர்மயோகி. மிகப் பெரும் பொருட் செலவில் இப்படம் திட்டமிடப்பட்டுள்ளது.

கமல்ஹாசன் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் திரிஷா, ஷ்ரியா, ஹேமமாலினி உள்ளிட்டோர் நடிக்கவுள்ளனர்.

இப்படத்தை பிரமிட் சாய்மீரா நிறுவனமும், கமல்ஹாசனின் ராஜ்கமல் இன்டர்நேஷனல் ஆகியவை இணைந்து தயாரிக்க திட்டமிட்டிருந்தன. அக்டோபர் மாதமே படப்பிடிப்பு தொடங்குவதாக இருந்தது.

இந்த நிலையில், படத்திற்குப் பெரும் பட்ஜெட் தேவைப்படுவதால், குசேலன் படத்தால் பெரும் அடியை சந்தித்திருந்த பிரமிட் சாய்மீரா நிறுவனம் தயாரிப்பிலிருந்து விலகுவதாக முதலில் செய்திகள் வெளியாகின.

இதைத் தொடர்ந்து சன் பிக்சர்ஸ் நிறுவனம் படத்தைத் தயாரிக்கலாம் என பேச்சு அடிபட்டது.

இந்த சூழ்நிலையி்ல தற்போது மர்மயோகி படமே கைவிடப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
நிதிப் பிரச்சினையே இதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.

இதை உறுதி செய்வது போல, கமல்ஹாசன் அடுத்த படத்திற்கு ஆயத்தமாகி வருகிறார். ஹைதராபாத், ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் படப்பிடிப்புக்காக போடப்பட்டிருந்த செட்டுகளும் கூட கலைக்கப்பட்டு விட்டனவாம்.

கமல்ஹாசன் அடுத்து ஜெமினி பிலிம் சர்க்யூட் படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கும் எனத் தெரிகிறது.

இப்படத்தில் கமல்ஹாசனுடன், மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் மற்றும் தெலுங்கு நடிகர் வெங்கடேஷ் ஆகியோர் நடிக்கவுள்ளனர். கமல்ஹாசனே இதை இயக்குவார் என்றும் கூறப்படுகிறது. இப்படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.

ஏற்கனவே கமல்ஹாசனின் கனவுப் படமான மருதநாயகம் சில காட்சிகள் படமாக்கப்பட்ட நிலையில் முடங்கிக் கிடக்கிறது. இந்த நிலையில் மர்மயோகியும் கைவிடப்படுவதாக வெளியாகியுள்ள செய்திகள் கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தந்தை பெரியாரும், சுயமரியாதை இயக்கமும் தோன்றுவதற்கு முன்... மனித சமத்துவப் போராட்ட முன்னோடிகள்

செக்ஸ் படங்களையும் அனுமதிக்கலாம்!-கமல்

பெரியார் மருந்தியல் மகளிர் கல்லூரி ;கல்லூரி வளாகத்தில் ஆராய்ச்சிக்குப் பயன்படும் வகையில் சுமார் 200 வகையான மூலிகைச் செடிகளை உடைய மூலிகைப் பண்ணை