பகுத்தறிவுக் கிராமம் கோயில் இல்லை அதனால், அதை அண்டிப் பிழைக்கும் பார்ப்பானில்லை,செக்கடிக்குப்பம்.


பகுத்தறிவுக் கிராமம்,


கோயில் இல்லை அதனால், அதை அண்டிப் பிழைக்கும் பார்ப்பானில்லை, அதனால், மூடநம்பிக்கையை வளர்க்கும் பழக்க வழக்கங்கள், பண்டிகைகள் ஏது-மில்லை. அதனால், நேரமும், பொருளும் வீணாவதில்லை. நேரம் மிச்சப்படுவதால் உழைப்பதற்கும், சிந்திப்பதற்கும் அதிக நேரம் கிடைக்கிறது. அதனால், வாழ்க்கைத்தரம் உயருகிறது. பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பி படிக்க வைக்க முடிகிறது. அதனால் பகுத்-தறிவும் செழிக்கிறது. கண் மூடிப்பழக்க-மெல்லாம் மண் மூடிப் போகும் வாய்ப்-பிருக்கிறது. சமத்துவமும் மலருகிறது.

எதற்கு இந்த கனவு என்கிறீர்களா? இப்படியொரு கனவைத்தான் நனவாக்கியிருக்-கிறது செக்கடிக்குப்பம்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தி-லிருந்து செஞ்சி போகும் வழியில் மேல் மலையனூரை அடுத்த ஒரு சின்னஞ்சிறு கிராமம்தான் செக்கடிக்குப்பம். அங்கு சுமார் ஆயிரம் மக்களுக்கு குறையாமல் இருப்பார்கள். பெரும்பாலானவர்களின் தொழில் விவசாயம்-தான். முதலில் அதை சின்னஞ்சிறு கிராமம் என்று சொல்லிவிட முடியாது. காரணம், ஒற்றை விதைக்குள்தான் ஒரு ஆலமரமே அடக்கமாக காத்திருக்கிறது.

கனவிலும் கூட பார்ப்பனர்களை வேர்த்து விறுவிறுக்கச் செய்யப்போகிறது இந்த செக்கடிக்குப்பம். பெரியாரின் கைத்தடியாக மாறியுள்ள இந்த செக்கடிக்குப்பம்தான், தான் பெற்ற இழிவுகளுக்குப் பதிலாக பார்ப்பனியத்-திற்கு சவுக்கடி கொடுத்து விட்டு தன்மானத்-துடன் தலை நிமிர்ந்து நிற்கிறது. செக்கடிக்-குப்பம் ஒரு அக்னிக்குஞ்சு. அதைச் சுற்றிலும் மூடநம்பிக்கையெனும் காடுகள் (கிராமங்கள்) நிறைந்திருக்ன்றன. செக்கடிக்குப்பம் மெல்ல மெல்ல, தன் பகுத்தறிவு தீ நாக்குகளை நீட்டி, நீட்டிப் பார்த்து கிராமங்களை தீண்டிக் கொண்டிருக்கிறது.

1967-இல் அவலூர்ப்பேட்டை, மேல்மலை-யனூர், செக்கடிக்குப்பம் போன்ற கிராமங்-களுக்கு பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் தனது வழக்கமான பிரச்சாரத்தின் பொருட்டு சென்று தனது கொள்கை விதைகளை தூவிச் சென்றிருந்திருக்கிறார்.

அதன் விளைவு....

இதோ! அந்த கிராமத்தின் வழிகாட்டியாக இருக்கும் அர்ச்சுனன் அவர்கள் சொல்கிறார்.

நானும் மேல்மலையனூர் அழகேசன், அவலூர்ப்பேட்டை கூ.சா.-ராமலிங்கம் ஆகியோர் சேர்ந்து இந்தப் பகுதியில் திராவிடர் கழகத்தைத் தொடங்கி-னோம். அதுவும் பெரியாரைப் பார்த்த பிறகுதான். அப்பத்தான் பெரியாரை நேரில் சந்தித்தோம். பேசினோம். நிறைய சொன்னாரு. எங்களுக்கெல்லாம் இந்தக் காலத்தில் இப்படி-யொரு மனுசனான்னு ஆயிடுச்சு. அவருக்-கப்புறம் .... வேறயாரு இந்த மக்களுக்காக இப்படி பாடுபட்டது.... இல்லே (கையை இல்லை யென்பது போல் விரிக்கிறார்) ஏற்கனவே நாங்க இந்த மாதிரி சிந்தனையில-தான் இருந்தோம். அய்யாவைப் பார்த்த பிறகு, ரொம்ப அழுத்தமா பதிஞ்சு போய் மெல்ல, மெல்ல முழுசா மாறிட்டோம்.

என்று கூறிவிட்டு மூச்சுவிடாமல் மீண்டும் தொடர்கிறார். அதற்கு முன்னர் இந்த கிராமம் எப்படி இருந்ததுன்னா, ரொம்பவும் கீழ்த்தர-மான ஊரா இருந்தது. வீட்டுக்கு வீடு சாராயம் காய்ச்சறது. மூனு மாசத்துக்கு ஒரு முறை நாலு மாசத்திற்குகொரு முறை போலீசு வந்து, அப்பல்லாம் சத்தியமங்களம் போலீசுதான். வந்து ரெய்ட் பண்ணி எல்லாரையும் கும்பலா புடிச்சிட்டுப்போய்...... அந்த மாதிரி ரொம்ப மட்டரகமான ஊருதான் இது. இதை-யெல்லாம் பார்க்கும்போது ஜனங்க இந்த மாதிரி போலீசுல அகப்பட்டுக்கிட்டு..... என்ன வாழ்க்கையின்னு தோனுச்சு. பெரியாரைப் பார்த்த பிறகு, அவர் சொல்றத கேட்ட பிறகு செய்ய வேண்டியத அழுத்தமா செய்ய வேண்டியதாப் போச்சு. இப்போ, 100-க்கு 98-பேருக்கு குடிப்பழக்கம் இல்லே. அது எப்படி வந்துச்சு. கிராமத்தில் பெரியவங்கதான் குடிப்பழக்கம் அது இதுன்னு போயிட்டாங்க. அதனால, சின்னப்பசங்களை கூட்டி வச்சு, அவங்ககிட்ட பேசி, தந்தை பெரியார்னு ஒருத்தர் இருக்காரு 95 வயசாச்சு. இந்த வயசிலயும் வந்து பொது சேவை செய்யறாரு. பெரியார், அண்ணா இவங்க எல்லாம் தனக்-கென்னு சேர்த்துக்கல. அப்பிடின்னு சொல்லும்-போது அவங்களுக்கு புடிக்குது. மெல்ல மெல்ல அவர்களுக்கு அய்யாவோட கருத்துக்களை சொல்றது. புத்தகங்களை கொடுக்கிறதுன்னு எங்க வாழ்க்கை முறையையே இப்படி அமைச்சிக்கிட்டோம். படிப்படியா மாறி-விட்டது. அய்யான்னா (பெரியார்) அதோட போயிடக்கூடாது. சின்னப் பசங்களையும் கொண்டு வரணும். அவங்களை கொண்டு வந்தாத்தானே எதிர்காலத்தில் சரியா வரும். அதனால்தான் பெரியார் மழலையர் கல்விச் சாலை நடத்திட்டு வருகிறோம். தமிழ்நாட்ல தமிழர்தான் ஆட்சி செய்யனும். அது சரிதான். இப்ப கலைஞர்தான் இருக்காரு. ஒரு தாய்த்தமிழ் பள்ளி நடத்தனுமுன்னா தாசில்-தாருக்கு பணம் குடு, ரெவின்யூ இன்ஸ்-பெக்டருக்கு பணம் குடுன்னா எப்படி? நாங்க யாரையும் நம்பறதில்ல. நம்ம ஊர்ல் நம்ம பசங்களுக்கு அய்யாவோட எண்ணங்களைக் கொண்டுபோய் சேர்க்கணும். அவ்வளவுதான்.

அதைவிட முக்கியமானது என்னான்னா குடிப்பழக்கம்தான். இப்ப அறவே குடிக்க வேண்டாம்னு சொல்லிட்டோம். அப்போ குடிக்கிறவன் என்ன நினைச்சான்னா, நமக்குன்னு ஆள் வேணுமே.... அதனால, அவன் கொஞ்ச பேர வச்சுகிட்டு எதிர்ப்பா பேசறது, செய்யறது. கொஞ்ச நாள் பண்ணாங்க. போற போக்குல அவன் (அர்ச்சுனன்) அய்யர் இல்லேன்னு சொல்லிப்புட்டான். ஏன் கடவுளே இல்லைன்னு செல்லிப்புட்டான். அவன் என்ன கெட்டுப் போயிட்டான். நல்லாதான் இருக்கான். அப்பிடின்னு காலப்போக்குல அவனும் அய்யர விட்டுட்டான். குடிப்-பழக்கத்தை மட்டும் விட முடியல அவனால. மத்த எல்லா விசயத்தையும் விட்டுட்டான். என்றார் அர்ச்சுனன்.

செக்கடிக்குப்பத்தில் வளர்ந்திருக்கும் மறுமலர்ச்சி சாதாரணமானதல்ல. அந்தக் கிராமத்தில் இருந்த கோயில்கள் இடிக்கப்-பட்டன என்று சிரித்துக் கொண்டே ஒருவர் சொன்னார், வியப்படைந்த நாம், அவர் பெயரைக் கேட்ட போது அவர் சொன்ன பதில் மேலும் நமக்கு வியப்பைத் தந்தது. என்னுடைய பெயர் கப்பல் ஓட்டிய தமிழன். நான் இங்கு விவசாயம் பார்த்துக் கொண்டிருக்கிறேன். கடவுள்னால ஒன்னும் ஆகப்-போற-தில்லைன்னு தெளிவா தெரிஞ்சுப்-போச்சு. அதனால, கோவில்களை இடித்து விட்டோம் என்கிறார். ஊர் மக்களே கூடி முடிவெடுத்து துஊஞ -இயந்திரத்தை அழைத்துக்-கொண்டு வந்து இடித்துத் தள்ளியிருக்-கிறார்கள். அதிலும் ஒரு வேடிக்கை. அந்த துஊஞ -யின் ஓட்டுநர் மிகவும் தயங்கியிருக்கிறார். பிறகு, கடப்பாறையை எடுத்து ஊர் மக்களே கொஞ்சம் இடித்துவிட்டு, பிறகு இடியுங்கள் என்று சொன்னபிறகே துஊஞ ஓட்டுநர் இடித்திருக்கிறார். அதுமட்டுமா? கோயிலை இடித்துவிட்டு அந்த இடத்தில் இராவணே அசுரன் அரங்கம் என்ற பெயரில் ஒரு அரங்கத்தை அமைத்து அதில் நல்ல வண்ணம் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். கப்ப-லோட்டிய தமிழன் தன் மகனின் பெயர் தமிழன் ஒட்டிய கப்பல் என்று கூறி மீண்டும் வியக்க வைக்கிறார்.

வியப்பிற்கு அங்கு பஞ்சமேது? பெரியார் பிஞ்சிலிருந்து தலைமுடி பஞ்சாய்ப் போன பெரியவர்கள் வரை இருபாலரும் வியப்புக்-குரியவர்களாக இருந்தனர்.

பகுத்தறிவு பாடல்கள் பாடும் காத்தவராயன் அவர்கள் பாடிய பாடல். பிரச்சாரத்திற்கான இலக்கணத்தைப் தொட்டுக் காட்டியதாகவே உணர முடிந்தது. (பாடல் தனியே)

படித்தாலே போதும். ஆனாலும், அதன் மெட்டையும் சேர்த்து முணுமுணுத்துப் பாருங்கள் எவ்வளவு உற்சாகம் பிறக்கிற-தென்று. இந்த உற்சாகமும், தெளிவும் பாமரனுக்கும் புரியும். பகுத்தறிவுப் பாடகர் காத்தவராயன் அங்கிருக்கும் பெரியார் பிஞ்சுகளுக்கு கோலாட்டப் பயிற்சி கொடுத்து தனது பாடல்களுக்கு பிஞ்சுகளை கோலாட்டம் அடிக்க வைத்து நாடி நரம்புகளை எல்லாம் முறுக்கேற்றி வைக்கிறார். இதற்கான பக்க வாத்தியங்கள் மிக மிக எளிமையானவை. ஆர்மினியப் பெட்டி ஒன்று, டோலாக்கு ஒன்று, ஜால்ரா ஒன்று. இவருடைய மகள் கா. சங்கீதாவும் இந்த இசைக்குழுவில் முக்கியமான ஒருவர்.

இங்கு இருபாலரும் கட்டாயம் கல்வி கற்க வேண்டும் என்பதில் மிகவும் தெளிவாக உள்ளனர். மகளிருக்கு ஏற்பட்டிருக்கும் தெளிவு வியப்பை நிலை நிறுத்துகிறது. அர்ச்சுனன் அவர்களின் மகள் தனியரசு- கூறுவதை படியுங்கள். என்பேரு தனியரசு. நான் ஆசியராக பணி புரிகிறேன். சின்ன வயசுல இருந்தே பயம் இல்லாததனால பக்தி இல்லாம போச்சு. தந்தை பெரியார்தான் அறிவில் சிறந்து இருக்கணும். ஆணுக்குப் பெண் சமமா இருக்கணும். அப்பதான் ஆணா-திக்கம் இல்லாம பெண்கள் தலைநிமிர்ந்து வாழ முடியும்னு சொன்னாரு. அவரோட புத்தகங்களை படிக்கும் போதுதான் பெண் ஏன் அடிமையானாள்னு புரியுது. இதற்-கெல்லாம் காரணம் ஆரியர்கள்தான். நாங்க தெரிஞ்சுகிட்டத எங்க பிள்ளைகளுக்குச் சொல்றோம். இப்ப பெண்கள் ஆண்களுக்கு சமமாக தான் வாழ்ந்துகிட்டு இருக்கோம். சுயமரியாதைத் திருமணம் நடக்கும்போதே அப்படித்தான் உறுதி எடுத்துக்கிறோம். அதோட பீடி, சிகரெட் குடிக்கக்கூடாது. குடிப்பழக்கம் கூடாது. மற்ற கெட்ட பழக்-கங்கள் கூடாதுன்னுதான் பெரியவங்க சொல்-வாங்க. நல்லத ஏத்துக்க வேண்டியதுதானே.

இது மட்டுமா? அங்கு பெரியார் என்ற பெயர் ஏராளம். அத்தோடு எழிலரசி, யாழ்முல்லை, செந்தமிழ்கணினி, விண்ணில் தமிழோசை இப்படி ஒரு பெரிய பட்டியலே இருக்கிறது. தந்தை பெரியார் அறிவித்து, அறிஞர் அண்ணா சட்டமாக்கிய சுயமரி-யாதைத் திருமணம் இங்கு 1968-லிருந்து நடந்து வருகிறது. அனைத்திற்கும் பதிவுகள் பாதுகாக்-கப்பட்டு வருகின்றன. அது குறித்த அறிவிப்பு-களை விடுதலைக்கும், முரசொலிக்கும் அனுப்பி வைத்திருக்கின்றனர். விடுதலையில் ஆண்டுக்கணக்கில் வந்திருக்கிறது. இங்கு தந்தை பெரியார் பிறந்த நாள் விழா, பொங்கல், தமிழ் மன்னர்கள் (இராவணன், கும்பகர்ணன், மேகநாதன்) விழாவைத் தவிர வேறு எந்த விழாவும் கொண்டாடப்படுவதில்லை.

அர்ச்சுனன் அவர்கள் மீண்டும் தன் வாழ்க்-கை-யின் கடந்துவிட்ட பகுதிக்கு நம்மையும் அழைத்துச் செல்கிறார்.

இராமன் ஆரியன். வடநாட்டுல இராம லீலா கொண்டாடறாங்க. நாங்க இராவண லீலாவுக்கு சென்னைக்கு போயிருக்கோம். இராவணனுக்கு முன்னால இலங்கையில யாராவது ஆட்சி பண்ணினாங்களான்னா, இல்லே. அப்ப முன்னாடியே நவீனமாக, நாகரிகமான மன்னன் இலங்கையை ஆட்சி பண்ணினான் அப்படிங்கிற அடிப்படையில் எல்லோருக்கும் இது தெரியட்டுமேன்னு தமிழ் மன்னர்கள் விழான்னு கொண்டாடறோம். என்றார். இராவணே அசுரன் அரங்கத்தை செஞ்சி ந.இராமசந்திரன் திறந்து வைத்-திருக்கிறார். அர்ச்சுனன், பகுத்தறிவுப் பாடகர் காத்த-வராயன் மற்றும் சிலர் கருப்புத் துண்டை அணிந்திருக்-கிறார்கள். மற்றவர்கள் எப்-போதும் கருப்புச் சட்டைதான்.

செக்கடிக்குப்பத்தில் மக்கள் பல்வேறு அமைப்புகளில் இருந்தாலும் அனைவரும் அடிப்படையில் பெரியார் சிந்தனைகளை முழுமையாக ஏற்றுக்கொண்டவர்கள். இங்கு பெண்கள் நகைகள் மாட்டும் ஸ்டாண்-டாக இல்லாமல் மிகவும் எளிமையாக இருக்கின்றனர். அதுமட்டுமல்ல, இருபாலாரும் தற்காப்புக் கலைகள் கற்றுக்கொள்வதற்கும், ஊக்கப்படுத்துகிறார் அர்ச்சுனன்.

அர்ச்சுனன் சொல்கிறார், சிலம்பம் கத்துக்க வரும்போதே பீடி புடிக்கிறது, பொடி போடறது, புகையில போடறது, கள்ளு குடிக்கிறது, சாராயம் குடிக்கிறது, ஹான்ஸ் போடறது எதுவும் இருக்கக்கூடாது. இது உன்னோட தற்காப்புக்காகத்தான் என்று கூறிவிட்டு, இல்லேன்னா ரவுடியாயிட்-டான்னா என்று சொல்லி சிரிக்கிறார். ஆக, சமூகத்தின் பல்வேறு கூறுகளையும் சிந்தித்து அதற்கு மக்களை தயார்படுத்தி வைத்திருக்-கிறார். தாங்கள் கற்றுக்கொண்ட தற்காப்புக் கலையை மக்கள் தற்பாதுகாப்பிற்கு மட்டுமே பயன்படுத்துவதால்தான் அந்தக் கிராமத்தில் காவல் துறையே, நுழைவதில்லை. அங்கிருந்-தும் காவல் நிலையத்திற்கு வம்பு, வழக்கென்று யாரும் எதற்கும் போவதில்லை. அப்படியே புதுசாக மாற்றல் பெற்று வந்த காவலர்கள் யாராவது அந்த கிராமத்திற்கு சென்று வந்தாலும் அதன் பிறகு அங்கு எட்டிப் பார்க்க வேண்டிய அவசியமில்லை என்பதைப் புரிந்து கொள்கிறார்கள். பெரியார் தத்துவம் ஒரு வாழ்க்கை நெறி என்பதற்கான ஒரு கண்கண்ட எடுத்துக்காட்டுதான் செக்கடிக்குப்பம்.

சிலம்பம் கற்றுத்தரும் செல்லக்கண்ணு வாத்தியார் இப்போது அ.இ.அ.தி.மு.க.வில் இருந்தாலும் அவரும் பெரியார் பற்றாளர்தான். அவருடைய குரு பொன்னுசாமி. பெரியார் பொன்னுசாமிக்கு புதுமைப்-பித்தன் என்று பெயர் மாற்றம் செய்திருக்கிறார். செல்லக்-கண்ணு சுமார் நாற்பது ஆண்டுகளாக சிலம்பம் கற்றுக் கொடுத்துக்-கொண்டிருக்-கிறார். தனது மாணவியான தமிழ்த்தென்றலை கம்பு சுழற்றி காண்பிக்கச் செய்து நம்மை அவரும் பெரும் வியப்பில் ஆழ்த்தினார்.

அர்ச்சுனன் திருமணம் செய்துகொள்ளும்-போது அந்தப் பகுதியின் திமுக தலைவர். சுயமரியாதைத் திருமணப் பதிவுப் புத்தகத்தில் பெரியார், அண்ணா படங்கள் அச்சிடப்-பட்டிருக்கிறது. பிறகு தொடர்ந்து பெரியார், அண்ணா, கலைஞர் பிறகு பெரியார், அண்ணா, வை.கோ அதன் பிறகு பெரியார், வை.கோ. என்று மாறுகிறது. அவை ஒவ்-வொன்றும் அந்தந்தக் காலகட்டத்தின் அரசியல் நிகழ்வுகளின் பின்னணியாக இருக்-கலாம். யார் மாறினாலும் பெரியார் மட்டும் மாறாமல் அப்படியே இருக்கிறார்.

குடும்ப நிர்வாகம் பற்றி கப்பலோட்டிய தமிழன் சொல்கிறார். திருமணத்தின்போதே பாதி விசயங்களை பெரியவர்கள் சொல்லிடு-வாங்க. பணம் பெண்கள் கிட்ட தான் கொடுக்கனும். அவங்ககிட்ட வாங்கித்தான் செலவழிக்கனும். அவங்க அதைச் சிறுகச் சிறுகச் சேர்த்து பெரிசாக்குவாங்க. என்கிறார்.

செக்கடிக்குப்பத்தின் நடுவில் தரிசாக கிடக்கும் நிலத்தில் தமிழ் தேசிய மரமான பனை மரங்களைப் பயிரிட்டு அனைவரும் சேர்ந்து பாதுகாத்து வருகின்றனர்.

கிராமத்தில் படித்து அந்தப் பக்கத்திலேயே ஆசிரியர் பணிகள் பார்க்கின்றனர். ஒன்றிரண்டு பேர் சென்னை போன்ற இடங்களில் நல்ல பணிகளில் இருக்கின்றனர். எங்கு, எப்படி இருந்தாலும் அனைவருமே கறுப்பு உடையை அணிவதைத் தவறாமல் கடைப்பிடித்து வருகின்றனர்.

அர்ச்சுனன் அவர்களின் மகன் அ.பெரியார். சென்னையிலிருக்கும் முத்துக்குமரன் கலைக்-கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து கொண்டிருக்கிறார். மற்றவர்கள் விவசாயத்தைச் செம்மையாக கவனித்துக் கொள்கிறார்கள். மகளிர் ஆசிரியப் பணியைத் தவிர பெண்கள் சுயஉதவிக் குழுக்கள் மூலம் ஒற்றுமையுடன் சுயதொழில் செய்கின்றனர். வங்கிகளில் கடன் உதவி பெற்று பொருளாதார வளர்ச்சி பெறுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் கட்டுக்கோப்பாக, கூட்டுறவாக செயல்பட்டு வருகின்றனர். ஆணும், பெண்ணும் சமம் என்பதை வெறும் பேச்சாக இல்லாமல் செயலிலும் காட்ட எண்ணி கரும்பு சுமை ஏற்றும் டிராக்டரில் மதியழகன் தனியரசு என்று கணவன் மனைவி இரண்டு பெயரையும் எழுதி வைத்துள்ளனர். மதியழகன் மேல்-மலையனூர் திராவிடர் கழக ஒன்றியப் பொறுப்பாளராக பணியாற்றி வருகிறார்.

மொத்தத்தில் பெரியார் கொள்கைகளைக் கடைப்பிடித்தால் எப்படிப்பட்ட சமத்துவச் சமுதாயத்தைப் படைக்கலாம் என்பதற்கு செக்கடிக்குப்பம் ஓர் எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது. செக்கடிக்குப்பத்தைப் பற்றி எவ்வளவு வேண்டுமானாலும் சொல்லலாம். ஆனால், ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதுபோலத்தான் சொல்லமுடிந்-திருக்கிறது. நாம் ஏற்கனவே சொன்னதுபோல செக்கடிக்குப்பம் சின்னஞ்சிறுக் கிராமம் அல்ல. காரணம், ஒற்றை விதைக்குள் தான், ஓர் ஆலமரமே அடக்கமாக காத்திருக்கிறது.

ஒற்றை விதை செக்கடிக்குப்பம்

ஆலமரம் இந்த உலகம்.

-உடுமலை வடிவேல்

நன்றி: நேர்காணலும், ஒளிப்பதிவும் செய்த பிரின்சு என்னாரெசு பெரியார், தலைமைக் கழக பொறுப்பாளர் த.ஜெயக்குமார், விழுப்புரம் மாவட்டத் தலைவர் மானமிகு க.மு.தாஸ், திண்டிவனம் நகர தலைவர் பெத்தண்ணம், மாவட்ட இளைஞரணித் தலைவர் கதிரவன், மாவட்டத் தொழிலாளர் அணித் தலைவர் கோபண்ணா, மற்றும் செஞ்சி நகர நிர்வாகிகள் திருநாவுக்கரசு, துரை, மேல்மலையனூர் ஒன்றிய நிர்வாகிகள் சாக்ரடீஸ், மதியழகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தந்தை பெரியாரும், சுயமரியாதை இயக்கமும் தோன்றுவதற்கு முன்... மனித சமத்துவப் போராட்ட முன்னோடிகள்

பிரபாகரன் என்ற பெயரை சொல்லக்கூடாதா? எனது நாக்கை வெட்டிக் கொள்வேனடா திரைப்பட இயக்குனர் பாரதிராஜா

செக்ஸ் படங்களையும் அனுமதிக்கலாம்!-கமல்