ஏன்?எதற்க்கு?எப்படி?

எதையும் கேள்வி கேட்காமல் அப்படியே ஒப்புக்கொள்ளாதே..?

6 நவம்பர், 2008

முதல்வர் கலைஞர்கருணாநிதி கடிதம்இலங்கைத் தமிழர்க்காக எத்தனை எத்தனை குரல்கள்!
இத்தனைக் குரல்கள் இருந்தால் விடியல் வருமா?

முதல்வர் கலைஞர் கடிதம்

இலங்கையில் தமிழர்கள் படுகொலைக்கு ஆளாவதும், பட்டினி கிடப்பதும் - அகதிகளாக அடுத்த நாடுகளுக்கு ஓடுவதும் - பட்ட காயத்துக்கு மருந்து தடவிடக் கூட முடியாமல் மாண்டு மடிவதும் செய்திகளாகவும் படங்களாகவும் வந்த போது; தமிழக அரசு தலையிட்டு மத்திய அரசுக்குச் சொல்லி அந்தப் படுகொலை களைத் தடுத்திட தக்க முயற்சிகள் எடுத்திட வேண்டாமா என்று தங்கள் அனுதாபத்தையும், ஆழ்ந்த வேதனையையும் வெளிப் படுத்தியவர்களை நானறிவேன். அந்தத் துயர கீதம், அவர்களின் தூய உள்ளத்திலிருந்து எழுவது என்பதும் எனக்குத் தெரியும்.

ஒன்றைச் சுட்டிக்காட்ட வேண்டுமென்றால் நேற்றைய காலை ஏடு ஒன்றில் நிவாரணப்பொருட்களை பாதிக்கப்பட்ட மக்களுக்கு எப்படி வழங்குவது என்பதை இலங்கை அரசுதான் முடிவு செய்யும் என்று ஒரு செய்தி வந்ததும் துடித்துப் போன நான் பத்து நிமிடங்களில் கடிதம் தயார் செய்து, பிரதமருக்கும், வெளி உறவுத் துறை அமைச்சருக்கும் பேக்ஸ் மூலமாக அனுப்பி விட்டுத்தான் தலைமைச் செயலகத்திலிருந்து காரில் ஏறி, வீடு திரும்புவதற்குள் காரிலேயே செய்தி, நமது மத்திய அமைச்சர்கள் என் கடிதத்தை நேரிலே எடுத்துச் சென்று வெளி உறவுத் துறை அமைச்சரிடம் கொடுத்த அடுத்த நிமிடமே ஒரு சில நிமிடங்களில் இதற்கு மத்திய அரசு விளக்கம் அளிக்கும் என்று கூறியதாகத் தகவல் கிடைத்தது. அதைப்போலவே நமது தலைமைச் செயலாளருக்கு மத்திய வெளி உறவுத் துறைச் செய லாளர் விளக்கமாக இலங்கையிலே உள்ள நமது இந்தியத் தூதரின் மேற்பார்வையில் செஞ்சிலுவைச் சங்கம், அய்.நா. மன்றத்தின் துணை அமைப்பு போன்றவற்றின் மூலமாகவே நிவாரணப் பொருள்கள் விநியோகிக்கப்படும் என்ற தகவல் கிடைத்தது.

ஒரு செய்தி ஏட்டில் வந்த அதே நாளில் மாநில அரசின் சார்பில் கடிதம் எழுதப்பட்டு, அதற்கு சில மணி நேரத்தில் பதில் அளிக்கக்கூடிய மத்திய அரசையும் நாம் பெற்று இருக்கிறோம். பா.ம.க. நிறுவனத் தலைவர் மருத்துவர் ராமதாஸ் அவர்களின் இன்றைய நீண்ட அறிக்கையிலேகூட இறுதியாக ஒற்றுமைய யைக் கட்டிக் காக்க வேண்டுமென்று நான் முன் மொழிந்ததை வழி மொழிகிறேன் என்று கூறி இருப்பது பெரிதும் ஆறுதலைத் தருகிறது. மேலும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போது - மத்திய அரசின் அதிகார எல்லை முதல்வருக்குத் தெரியாதா என்று கேட்டிருக்கிறார். நன்றாகத் தெரியும். தெரிந்துதான் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அது மாத்திரமல்ல, பதவி விலகல் குறித்து வேறு எந்தக் கட்சித் தலைவர்களும் கூறாத நிலையில் நான்தான் அந்தக் கருத்தினை முதன் முதலாகத் தெரிவித்தேன். அப்போது கூட - தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர், நண்பர் தங்கபாலு எம்.பி. - நாம் அனைவரும் பதவி விலகிவிட்டால், மத்திய அரசு அங்கே இருப் பதே கேள்விக் குறியாகி விடும். பிறகு யாரிடம் நம்முடைய வேண்டுகோளை வைப்பது என்றெல்லாம் கேட்டார். இருப் பினும் நாம் அத்தகைய தீர்மானம் ஒன்றை நிறைவேற்றக் காரணமே - அப்போதுள்ள சூழ்நிலையில் நமது உணர்வுகளை வெளிப்படுத்தக்கூடிய அளவிற்கு பதவி விலகல் நேரிடும் என்றுதான் கூறியுள்ளோம். அவ்வாறு நாம் தீர்மானம் நிறை வேற்றி அதனையொட்டி கழகத்தின் சார்பில் பதவி விலகல் கடிதங்கள் என்னிடம் தரப்பட்டதும்தான் இந்த அளவிற்கு வேகமாக, நம்முடைய மற்ற தீர்மானங்களை எல்லாம் ஏற்கக் கூடிய அளவிற்கும் போர் நிறுத்தம் என்ற தீர்மானத்தைக் கூட வலியுறுத்திக் கூறுவதற்கும் காரணமாக அமைந்தது.

பங்களாதேஷ் உதாரணத்தை நான் சொன்னதையும் திரு ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார். பங்களாதேஷ் உருவானபோது அன்றை சூழ்நிலையில் அன்னை இந்திரா காந்தி அவர்கள் நாடாளுமன்றத்தில் முழுப்பெரும்பான்மையைப் பெற்று யாராலும் கேள்வி கேட்க முடியாத தலைவராக இருந்தார். தற்போதுள்ள நிலைமை அப்படியா உள்ளது?

டாக்டர் ராமதாஸ் அவர்கள் மீனவர் பிரச்சினை பற்றியும் அறிக்கையிலே குறிப்பிட்டுள்ளார். மத்திய அமைச்சர் பிரணாப் அவர்கள் சென்னையில் என்னைச் சந்தித்து விட்டுச் செய்தியாளர் களைச் சந்தித்த போது, மீனவர் பிரச்சினையில் மனிதாபிமானம் மற்றும் வாழ்வாதாரம் ஆகியவைகளை மனதில் கொண்டு, சர்வதேச எல்லையில் இந்தியா மற்றும் இலங்கை மீனவர்கள் மீன் பிடிப்பதற்காக ஏற்பாடுகளை சீரிய முறையில் நடைமுறைப் படுத்த இரு நாடுகளும் ஒப்புக்கொண்டு உள்ளன என்றும், அந்த ஒப்பந்தப்படி இந்திய மீன் பிடிப்படகுகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட மாட்டாது என்றும் திட்ட வட்டமாகக் கூறியிருக்கிறார்.

பல்வேறு அறிவிப்புகளுக்கெல்லாம் சொந்தம் கொண்டாடு கிற கலைஞர் இதில் மட்டும் பா.ம.க.வை நோக்கி கையை நீட்டுவதில் என்ன நியாயம் இருக்கிறது? என்றும் திரு ராமதாஸ் கேட்டுள்ளார். எந்த அறிவிப்புக்கும் சொந்தம் கொண்டாட நான் தயாராக இல்லை. அப்படிக் கூறிக் கொள்வதும் கிடையாது. மற்றவர்கள் கூறுவதற்கு நான் பொறுப்பல்ல. பா.ம.க.வை நோக்கிக் கையை நீட்டுவதற்கும் நான் தயாராக இல்லை. டாக்டர் ராமதாஸ் அவர்கள் கேள்வி கேட்டதால் அவருக்கு பதில் சொல்ல நேரிட் டதே தவிர, அவருடைய அறிக்கைக்கு நான் பதில் தருவதும், எனக்கு அவர் பதில் தருவதும் வேண்டாத வேலை என்பதுதான் என்னுடைய அபிப்பிராயம். இலங்கைத் தமிழர்களுக்கு உதவவேண்டும் என்பதுதான் முக்கியமே தவிர, இங்கே ஒருவருக்கொருவர் பதில் கூறிக் கொண்டிருப்பது அல்ல.

மத்திய அரசின் செயல்பாடுகள் நமக்கு திருப்தியை அளிக் கின்றன. தமிழர்கள் அவதிப்படுவதை உணருகின்ற அரசும், தலைவர்களும்தான் மத்தியிலே இருக்கிறார்கள். அவர்கள் நம் உணர்வை மதிக்கிறார்கள். அவர்களால் முடிந்த அளவிற்கு உதவி செய்கிறார்கள். அதனை மேலும் அதிகமாக்குகின்ற அளவிற்கு நாம் நம்முடைய கோரிக்கைகளை எழுப்புவோம்.

ஆனால் இங்கே எத்தனை குரல்கள்? எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதா நிதி திரட்டுவதையே மோசடி நாடகம், கபட நாடகம் என்கிறார். மதிமுக வின் பொதுச்செயலாளர் திரு வைகோ, நிவாரணப் பொருள்கள் வழங்குவோம் என்று கூறுவது தமிழக மக்களை ஏமாற்றும் வேலை என்கிறார். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் தோழர் தா. பாண்டியன் திரட்டப்படும நிவாரண நிதி அப்பாவித் தமிழர்களுக்குப் போய்ச் சேரும் என்பதற்கு என்ன உத்தரவாதம் என்கிறார். தேமுதிக தலைவர் திரு. விஜயகாந்த் நிவாரண உதவிகள் உண்மையில் மரணப்படுக்கையில் உள்ள இலங்கைத் தமிழ் மக்களுக்குப் போய்ச்சேருமா என்பதே சந்தேகம் என்கிறார். இத்தனை குரல்களும் வேறுபட்டு, மாறுபட்டு ஒலிக்காமல் ஒன்றுபட்டு ஒலித்திட்டால் மத்திய அரசின் முயற்சிகளை மேலும் தீவிரப்படுத்திட உதவியாக அது அமையும் என்பதுதான் என்னுடைய கருத்து. இல்லையேல் இலங்கைத் தமிழர்களின் தலைவிதி இப்படித்தான் அமையும் போலும் என்று கடந்த கால நிகழ்வுகளையும், இக்கால நிகழ்வுகளையும் எண்ணி ஏங்கி எதிர்கால விடியல் வருமா? என்று கண்ணீர் விட வேண்டியது தான்!

- இவ்வாறு முதல்வர் கலைஞர் தனது கடிதத்தில் எழுதியுள்ளார்.நன்றி விடுதலை
0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு