சிலர் மனிதநேயத்தைத் துறந்தவர்களாக இருக்கிறார்கள் சிங்கள அரசோ "ஆடு நனைகிறதே என்று அழும் ஓநாயாக" இருக்கிறது!

சிலர் மனிதநேயத்தைத் துறந்தவர்களாக இருக்கிறார்கள்
சிங்கள அரசோ "ஆடு நனைகிறதே என்று அழும் ஓநாயாக" இருக்கிறது!

பார்ப்பன ஏடுகளோ திட்டமிட்டுச் சாயம் பூசுகின்றன கலைஞரின் அறிக்கை நல்லெண்ணத்தின்பாற்பட்டது அரசியல் மாச்சரியங்களுக்கு "விடுமுறை" அளித்திடுக!

ஒருங்கிணைந்து ஒன்றுபட்டுக் குரல் கொடுக்க தமிழர் தலைவர் வேண்டுகோள்!

ஈழத் தமிழர் பிரச்சினையில் ஒன்றுபட்டுக் குரல் கொடுக்க, தங்களது அரசியல் மாச்சரியத்திற்கு ஒரு தற்காலிக விடுமுறை அளித்து, ஈழத் தமிழருக்காக கைகோத்து ஒன்றுபட்டுக் குரல் எழுப்பவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அறிக்கை விடுத்துள்ளார். அறிக்கை வருமாறு:

இலங்கையில் வாழும் ஈழத்தமிழர்களை, அங்கு நடைபெறும் போரிலிருந்து, குண்டுமழைப் பொழிவினால் ஏற்படும் அழிவிலிருந்து காப்பாற்றவேண்டும் என்பதில் தமிழ்நாட்டில் உள்ள தமிழர்கள் ஒன்றுபட்டுக் குரல் கொடுக்கவேண்டும் என்பதை நமது முதலமைச்சர் கலைஞர் அவர்கள் நாளும் தவறாமல் வற்புறுத்தி வருகிறார்கள்.

ஒன்றுபட்டு நமது உணர்வுகளை ஒலிக்கும் நிலைக்கு தமிழ்நாட்டில் உள்ள சில கட்சிகளும், தலைவர்களும் மாறுபட்டு இருப்பது வேதனைக்குரியது; தவிர்க்கப்படவேண்டியது.

பிரதமர் அறியாததல்ல!

வேறு சிலர் இந்த இனப் படுகொலையை மறைத்துவிட்டு, இது ஏதோ விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகச் செய்யப்படும் முயற்சி என்று தமது மனச்சாட்சியை அடகு வைத்துவிட்டு திசை திருப்பி, மனிதநேயத்தைத் துறந்தவர்களாகவே காட்சி அளிக்கின்றனர்.

மத்திய அரசும் நமது பிரதமரும் சுவர் எழுத்துப் போல, ஓங்கிய கடல் அலைபோல் உள்ள தமிழர் தம் உணர்வைப் பார்த்து, உடனடியாக இலங்கை அதிபர் ராஜபக்சேவை, போர் நிறுத்தம் செய்ய வற்புறுத்தக் கடமைப்பட்டுள்ளார். கலாச்சார உறவும், அண்டை நாடு அதில் தமிழர்கள் கணிசமானவர்கள் என்பதும் பிரதமர் அறியாததல்லவே!

ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுத கதை!

சிங்கள ஆட்சியாளர்கள் இந்திய அரசுக்கு தங்களது இனப் படுகொலையை மறைக்க, ராஜீவ் காந்தி கொலைபற்றி இப்போது ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுத கதையாகக் கூறி, மூக்கைச் சொறிந்துவிடலாம் என்று பார்க்கிறார்கள்!

முன்பு ராஜீவ் - ஜெயவர்த்தனே செய்த இந்திய - இலங்கை உடன்பாட்டையொட்டி, கொழும்புக்குப் போன பிரதமர் ராஜீவ் அவர்கள், இராணுவ மரியாதை பெறும் அணிவகுப்பின்போது நடந்து வந்த அவரை, சிங்கள வெறியுடன் துப்பாக்கிக் கட்டையால் தாக்கிட, சிங்கள இராணுவ வீரன் முயன்றபோது, அவர் திடீரென குனிந்த காரணத்தினால் அன்று உயிர் தப்பினார்; இவ்வளவு பெரிய குற்றத்திற்குரிய - கொலை முயற்சி வழக்குக்கூட நடத்தாமல், லேசான தண்டனை கொடுத்து, சிறையில் சில காலமிருந்த அந்த சிங்கள சிப்பாய், தேர்தலிலும் நிற்கும் அளவுக்கு அவருக்குப் பின்னால் சில சிங்கள சக்திகளே இருந்ததை மறைத்துவிடவும், மறந்துவிடவும் முடியுமா?

ராஜீவ் காந்தியின் கொலையை எவரும் ஏற்கவோ, நியாயப் படுத்தவோ முடியாது, கூடாது. கண்டிக்கவே செய்தோம்.

பல லட்சக்கணக்கான ஈழத் தமிழர்கள் தங்கள் வாழ்வுரிமையைப் பறிகொடுத்து, சொந்த நாட்டிலேயே அகதிகளாய் பஞ்சப் பராரி களாக காடுகளில் வாழும் வெங்கொடுமைக்கு ஆளாகித் தவிப்பதா என்பதே இப்போதுள்ள பிரச்சினை.

அதைப் பார்த்து மானமும், மனிதநேயமும் உள்ள தமிழ் உறவுகள் கைபிசைந்து வேடிக்கை பார்க்க முடியுமா?

அகநக நட்பு கொண்டுள்ள நிலை

இங்கு கலைஞர் அரசு - தி.மு.க. அரசு நடப்பதால், அவர்தம் ஆதரவையும், நேசக் கரத்தின் பலத்தினையும் அய்க்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவர் திருமதி சோனியா காந்தி அவர்களும், பிரதமர் மன்மோகன்சிங், வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி போன்ற தலைவர்களும் உணர்ந்து, இடையில் புகும் சகுனிகளையும் புறந்தள்ளி, அகநக நட்பு கொண்டுள்ள நிலையில், அதனை முறித்துவிட, இந்த ஈழத் தமிழர் பிரச்சினையில் ஏற்பட்ட எழுச்சியை ஒரு முக்கிய வாய்ப்பாகக் கொண்டு காய் நகர்த்திடும் கேவலமான அரசியல் யுக்தியை தமிழர்களால் புரிந்துகொள்ள முடியாதா?

செயல்படும் மத்திய அரசிடம் உரிமையுடன், நல்லுறவு கொண்டுள்ள முதல்வர் கலைஞர் வற்புறுத்திட விழையும் கட்சித் தலைவர்கள் - போர் நிறுத்தம் நிரந்தர அமைதி - தீர்வு அங்குள்ள தமிழர்களுக்கு ஏற்பட, முதல்வருடன் இப்பிரச்சினையில் மட்டுமாவது ஒன்றுபட்டு நின்று அவரது கரத்தைப் பலப்படுத்தினால்தானே அது இயலும்?

முதல்வரின் நன்றி!

இன்று காலை முதல்வர் கலைஞர் அவர்கள் விடுத்துள்ள ஓர் அறிக்கையில்கூட,

இந்தப் பிரச்சினையில் சுதந்திரமாகச் செயல்பட வருக, வருக என்று என்னைக் காட்டிலும் வீரமிக்க தமிழர்களை அழைப்பதோடு நான் ஒதுங்கி நின்றுவிடாமல், அவர்களுடன் இணைந்து பணியாற்றுவேன் என்றும் உறுதி கூறி - என்னுடனிருந்து துணை நிற்கும் தூய உடன் பிறப்புகள் அனைவருக்கும் நன்றி கூறுகிறேன் எனக் கூறியுள்ளார்களே!

நேற்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் சகோதரர் வைகோ, அவைத் தலைவர் திரு. கண்ணப்பன் போன்றோரது விடுதலைக்கு தமிழக அரசே வழிவகுத்துள்ளதுகூட, இந்த நல்லெண்ண அழைப்பின் பாற்பட்டதுதானே!

நம்மைப்போல் ஆட்சிக்கு அப்பாற்பட்டுள்ளவர்களைவிட, ஆட்சி நடத்துவோருக்குள்ள பொறுப்புகளும், கடமைகளும், அரசியல் கட்சித் தலைவர்கள் அறியாததல்லவே!

எனவே, காரியம் பெரிதா? வீரியம் பெரிதா? என்று நமது கிராமங்களில் கூறுவார்களே, அதுபோல, அவதிப்படும் லட்சோபலட்சம் ஈழத் தமிழ் சகோதர, சகோதரிகளை மட்டும் பாருங்கள்; உள்ளூர் அரசியலை சற்று ஒதுக்கி வைத்துவிட்டு!

தேச பக்தி போர்வையுடன்!

நமது இன எதிரிகள் சிங்களர்களின் இரவல் குரலாக, ஊதுகுழலாக ஒலிப்பது ஓர்புறம்; இங்கேயே உள்ள விபீஷணத் திருக்கூட்டம், தேசபக்தி போர்வையுடன் அவர்தம் அரசியல் விரக்திக்கு வெளிப்பாடு தர இதோ ஒரு அரிய வாய்ப்பு என்று முணுமுணுக்கும் கூட்டம்; பார்ப்பன ஏடுகளின் திட்டமிட்ட தமிழர்களை இனமொழி வெறியர்களாக சாயம் பூசிடும் பணிகள் ஓர்புறம் என்ற நிலையில்தான், ஒத்த இலக்குடைய தமிழர்கள், கட்சிகளை - அரசியலை தற்காலிகமாக நிறுத்தி, அங்கே போர் நிறுத்தம் வர, இங்கே நமக்குள் சகோதர யுத்தம் இல்லாத ஒரு போர் நிறுத்தத்துடன் மூத்த, முதிர்ந்த முதல்வரின் தலைமையில் ஒன்று சேர்ந்து வற்புறுத்தினால் நாம் வெற்றி அடைவது உறுதி! நிச்சயம்!!

பாதுகாப்பிற்கு பாலமாக அமையும்

பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அவர்கள், விரைவில் கூடவிருக்கும் சட்டப்பேரவையில் ஒரு தீர்மானம் கொண்டு வரவேண்டுமென்று முதல்வருக்கு வேண்டுகோள் விடுப்பது வரவேற்கத்தக்கதுதான்; ஆனால், அதில் உள்ள ஒரே சிக்கல், அது ஒருமனதாக அத்தீர்மானம் நிறைவேறினால்தான் நமக்கு அது பலமாக, மத்திய அரசின் நடவடிக்கைக்கும், ஈழத் தமிழர்களின் பாதுகாப்பிற்கும் பாலமாக அமையும்.

எதிர்க்கட்சித் தலைவர் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் மற்றும் சில கட்சிகள் எதிர்த்தோ அல்லது கலந்துகொள்ளாமல் வெளி நடப்போ செய்யுமானால், நம்மில் உள்ள ஒற்றுமையின்மை, பதிவு செய்யப்படுவதுடன், சிங்கள அரசுக்கு மகிழ்ச்சியைத் தருவதாகவும் அமைந்துவிடக்கூடாது.

ஒன்றுபட்டு குரல் எழுப்பவேண்டும்!

அனைவரும் இதில் ஒன்றுபட்டு குரல் கொடுக்க, தங்களது அரசியல் மாச்சரியத்திற்கு ஒரு தற்காலிக விடுமுறை அளித்து, ஈழத் தமிழருக்காக கைகோத்து ஒன்றுபட்டு குரல் எழுப்பவேண்டும்.

தமிழ்நாடு அரசு முயற்சி என்பதுதான் வரலாற்றில் முக்கியமானது; மத்திய அரசுக்கு அனைத்துக் கட்சிகளும் ஒருங்கிணைந்து அழுத்தம் தரும் முயற்சியாகும். முயற்சி திருவினையாகும் என்று நம்புவோமாக!

- கி. வீரமணி, நன்றி விடுதலை

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தந்தை பெரியாரும், சுயமரியாதை இயக்கமும் தோன்றுவதற்கு முன்... மனித சமத்துவப் போராட்ட முன்னோடிகள்

செக்ஸ் படங்களையும் அனுமதிக்கலாம்!-கமல்

பெரியார் மருந்தியல் மகளிர் கல்லூரி ;கல்லூரி வளாகத்தில் ஆராய்ச்சிக்குப் பயன்படும் வகையில் சுமார் 200 வகையான மூலிகைச் செடிகளை உடைய மூலிகைப் பண்ணை