ஏன்?எதற்க்கு?எப்படி?

எதையும் கேள்வி கேட்காமல் அப்படியே ஒப்புக்கொள்ளாதே..?

16 நவம்பர், 2008

ஆண்டவன் கட்டளை இட்டால், அடுத்த நாளே அரசியலுக்கு வரத் தயார் ,திராவிடர் என்ற சொல் தமிழ்ச் சொல்லா?

ஆசிரியர் விடையளிக்கிறார்

கேள்வி: விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனிட மிருந்து தமிழ் மக்களை காப்பாற்ற வேண்டும் என்று இலங்கை தமிழ் அமைப்புத் தலைவர் ஆனந்தசங்கரி கூறியுள்ளாரே?

பதில்: அன்று இலங்கையில் (இராமாயண கற்பனைக் கதைப்படி) இராவணனுக்குக்கூட, அவன் தம்பி விபீடணன் காட்டிக் கொடுத்ததுபோல், வாலியை அழிக்க சுக்ரீவன், இராமனுக்குக் காட்டிக் கொடுத்ததுபோல அங்கேயும் இப்போது விபீடணன், சுக்ரீவர்கள் தமிழினத்தைக் காட்டிக் கொடுத்து சிங்களக் காடையரிடம் கைக்கூலி பதவி, விளம்பரம், பெறுகின்றனரே, ஆனந்த சங்கரி, டக்ளஸ் தேவானந்தா, கருணா என இப்படி பலரும் உண்டே! துரோகத்தின் நவீன உருவங்கள் அவர்கள்!

கேள்வி: ஆண்டவன் கட்டளை இட்டால், அடுத்த நாளே அரசியலுக்கு வரத் தயார் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளாரே?

பதில்: ஆண்டவர்கள் யார் என்பதுதான் ஆராய்ச்சிக்குரியது! எல்லாம் வல்ல ஆண்டவன்கள் இப்போது கட்டளை இடும் நிலையில் இல்லை; காரணம் அவர்களுக் குள்ள தீவிரவாதிகள் பயமும், அதனால் ஏ.கே. 47 துப்பாக்கிப் பாதுகாப்பும் தானே அவர்களையே வழிநடத்துகிறது!

கேள்வி: ஆயுதங்களைக் கீழே போட்டு சரண் அடைந்தால், போரை நிறுத்தத் தயார் என்று இலங்கை அதிபர் ராஜபக்சே அறிவித்துள்ளாரே? - காஞ்சி தி. இரமணன், தண்டையார்பேட்டை, சென்னை-81

பதில்: பழைய பல்லவி இது, ஆயுதங்களை போட்டு விட்ட பிறகு இவர்கள் யாருடன் போர் புரிவர்? அர்த்தமற்றவை! இல்லாத ஊருக்குப் போகாத பாதை இது! நம்பகத் தன்மை இவர்களிடம் மருந்துக்கும் கிடையாதே!

கேள்வி: திராவிடர் என்ற சொல் தமிழ்ச் சொல்லா? - அ. வளன்சுபராஜா, கூட்டப்புளி (நெல்லை)

பதில்: ஆம்; புரட்சிக் கவிஞர் விளக்கம், பன்மொழிப் புலவர் அப்பாதுரையார் போன்ற தமிழ் ஆய்வாளர்களின் அறிவு விளக்கம் அது! திரு இடம்தான் திராவிடம்!

கேள்வி: பாரக் ஒபாமாவின் பொருளாதார ஆலோசகர் - இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட ஆர்.எஸ்.எஸ். குடும்பத்தைச் சார்ந்தவராமே? - நா. தமிழரசன், புதுச்சேரி

பதில்: எங்கும் அவாள் முதலில் நுழைவது வரலாற்றில் வாடிக்கைதானே! (மறுத்துள்ளார் - பொறுத்திருந்து பார்ப்போம்!)

கேள்வி: நிறவெறி கொண்ட அமெரிக்காவில் கறுப்பர் ஒருவர் அதிபர் ஆகி விட்டார்; இந்தியாவில் பிரதமராக ஒரு தாழ்த்தப் பட்டவர் வர முடியவில்லையே? - வா. க. அம்பேத்பிரியன், திருவிக. நகர், சென்னை

பதில்: நம்மில் ஒற்றுமையும், இன உணர்வும் இருந்தால் முடியுமே! கே.ஆர். நாராயணன் ஏற்கனவே குடியரசுத் தலைவராக வந்ததுபோல நாளை வருவார்கள். ஆனால் கட்சி அரசியல், பதவி வெறியால் பார்ப்பனர்களை நம்பிஇறங்குதல் - இவைகளால் பின்னடைவு தோன்றுகிறது! ஒடுக்கப்பட்டவர்களுக்கு ஓராயிரம் தலைமை ஏன்? பிறகு எப்படி எளிதில் கிட்டும்?

கேள்வி: கைகழுவும் நாள் என்று ஒரு நாளே (அக்டோபர் 15) அறிவிக்கப்பட்டுள்ளதே - அதன் முக்கியத்துவம் என்ன? - கு. அரசி, வத்தலக்குண்டு

பதில்: கை கழுவது மிக மிக முக்கியம்! சுகாதாரத்தில் மட்டுமல்ல; தனி வாழ்வில் மட்டுமல்ல; அரசியல் பொது வாழ்விலும்கூட, கை கழுவ வேண்டியவர்களை வேண்டியவைகளை கட்டி மாரடிப்பதால் தான் வேதனை. வெட்கம் - தோல்வி எல்லாம்!

கேள்வி: வேதங்களில் ஆண் கடவுள்கள் சண்டையிட்டதாகவும், புராணங்களில் பெண் கடவுள்கள் சண்டையிட்டதாகவும் அண்ணல் அம்பேத்கர் குறிப்பிட்டுள்ளதுபற்றி... - மா. சுதந்திரன், சென்னை-19

பதில்: அண்ணல் அம்பேத்கர் ஆழ்ந்த அறிவு படைத்த ஏராளமான நூல்களைப் படித்த மேதை. அவர் கூற்றுக்கு எப்போதும் ஆதாரம் ஏராளம் உண்டே!

கேள்வி: இந்தப்படிப்புக்கு இந்தச் சம்பளம் என்று வரையறுத்து விட்டால், பொருளாதார ஏற்றத் தாழ்வு சரியாகாதா? - மு. உசேன், வேலூர்

பதில்: நீங்கள் சொல்வது ஒரு சிறு கூறு! சோஷலிச சமுதாயம் அமைந்தால்தான் அந்த மாறுதல் வரும். இல்லாமை, கல்லாமை, போதாமை, வறுமை ஒழிந்து, அறியாமையும் ஒழிந்தால் சமச்சீர் - சமதர்ம சமுதாயம் தானே மலரும்.

கேள்வி: விடுதலைப்புலிகள் போர் நிறுத்த அறிவிப்புச் செய்த பிறகும் ராஜபக்சே முரண்டு பிடிக்கிறாரே? - இல. அன்புமதி, மாங்காடு

பதில்: தன்னைச் சரியாக அடையாளம் காட்டிக் கொண்டது சிங்கள ஆதிக்க வெறி!

லேபிள்கள்:

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு