ஏன்?எதற்க்கு?எப்படி?

எதையும் கேள்வி கேட்காமல் அப்படியே ஒப்புக்கொள்ளாதே..?

9 நவம்பர், 2008

ராஜபச்சே பதுங்கு குழியில் ஒளிந்து கொண்டாராமே? ஆசிரியர் வீரமணி விடையளிக்கிறார்

ஆசிரியர் விடையளிக்கிறார்

கேள்வி: மகாராட்டிர மாநிலம் - மாலேகான் மாவட்டத்தில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் கைது செய்யப்பட்டுள்ள பிரசாத் புரோகித் என்பவர் (ஓய்வு) இந்தியத் தரைப்படை லெப்டினென்ட் கர்னலாமே?

- சா. குணசேகர், விருகம்பாக்கம்

பதில்: பார்ப்பனர்களின் சதித் திட்டம் ஓய்வு பெற்றபின்பும் அவாள் நலனுக்கு, இந்துத்வா தீவிரவாதத்திற்கு, எப்படியெல்லாம் திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது என்பதற்கு - பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் போன்றது இது! புரிந்து கொள்ளட்டும் நாடும் ஏடும்!

கேள்வி: 2 பஜ்ரங்தள், வி.எச்.பி. அமைப்புகளைத் தடை செய்ய எந்தவித முகாந்திரங்களும் இல்லை என்று தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன் கூறுகிறாரே?

- வாசு. வச்சலா, மேலக்காவேரி

பதில்: பலே! பல! இப்படித்தான் இந்துத்துவாவை உள்ளிருந்தே வளர்க்க வேண்டும். கட்டுச் சோற்று மூட்டைக்குள்ளே பெருச்சாளிகள்!

கேள்வி: கொழும்பில் அய்.நா. கிளை அலுவலகம் ஒன்றை அமைப்பதற்குக் கூட அனுமதிக்காத நிலையில், இலங்கை அரசு பற்றி அய்.நா. சரியான முடிவுக்கு வந்திருக்க வேண்டாமா?

- கு. சேகரன், காஞ்சிபுரம்

பதில்: உலகப் பார்வை அதன்மீது விழக் கூடாது என்பதில் சிங்களப் பேரினவாதம் அவ்வளவு குறியாய் உள்ளது!

கேள்வி: ராஜபச்சே பதுங்கு குழியில் ஒளிந்து கொண்டாராமே?

- காழி. துரைசாமி, சென்னை-12

பதில்: ஆம்; விடுதலைப்புலிகளை ஒடுக்கி விட்டதற்கு அருமை யான ஆதாரத்தைக் காட்டவே அவர் பதுங்கு குழி நோக்கினார் போலும்!

கேள்வி: காங்கிரஸ் அலுவலகமான சத்தியமூர்த்தி பவன், வாஸ்து சரியில்லை என்று ஒரு பகுதி இடித்துக் கட்டப்படுகிறதாமே?

- காஞ்சி தி. இரமணன், சென்னை-81

பதில்: அதுபற்றி காங்கிரஸ் தலைவர்களுக்கிடையே அறிக்கை, பேட்டி, எதிர்ப் பேட்டிகள் எல்லாம் வந்துள்ளனவே! வாழ்க தேசியம்!

கேள்வி: முதல் அமைச்சர் கலைஞரை பதவி விலகக்கோரி தந்தி அனுப்புமாறு கேட்டுக் கொண்டுள்ளாரே செல்வி ஜெயலலிதா?

- நெய்வேலி க. தியாகராசன், கொரநாட்டுக் கருப்பூர்

பதில்: புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுக் கொண்ட கதை இது! ஈழத் தமிழர்களைக் காப்பாற்றிட இவரின் பங்களிப்பு இதுவரை என்னவென்று விளக்கினாரா?

கேள்வி: அமெரிக்க அதிபர் மாறினாலும், அந்நாட்டின் கொள்கை மாறாது என்கிறார்களே?

- த. வீரசிவாஜி, ஓலக்கோடு

பதில்: பொறுத்திருந்து பார்க்கும் உலகம்! அடிப்படை மாறுமோ மாறாதோ, அணுகுமுறை நிச்சயம் மாறவே செய்யும்!

கேள்வி: சூரபத்மனை முருகன் இரு கூறாகப் பிளந்து ஒன்றை மயிலாவும் (ஆசனம்) இன்னொன்றை சேவலாகவும் (கொடி) வைத்துக் கொண்டார் என்கிறார்களே?

- நா. சிவனேசன், தருமபுரம் (மயிலாடுதுறை)

பதில்: பைத்தியம் பிடித்தவனுக்கு கள் ஊற்றிய கதைகள் பற்றியா ஆராய்ச்சி? அய்யகோ! அறிவுக்கும் அக்கதைக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை!

கேள்வி: பொது இடங்களில் புகைபிடிப்பது தண்டனைக்குரிய குற்றம் சரிப்பட்டு வருமா?

- ஆர்.கே. ராசன், ஆடுதுறை

பதில்: நியாயம் தானே; சரிப்பட்டுத் தான் வர வேண்டும். நல்லவைகளைப் பாராட்டி வரவேற்க வேண்டும் நாம்!

கேள்வி: அழகு சாதனப் பொருள்களைத் தடை செய்தால் எவ் வளவோ பொருளாதாரம் மிச்சப்படாதா?

- தி.மாலதி, காரைக்கால்

பதில்: பெண்கள் வாக்கு வங்கியை தேர்தலில் நிற்போர் யோசிக்க மாட்டார்களா? எனவே இது போன்றவைகளை அவர்கள் ஆதரிக்க மாட்டார்களே! முதலில் அழகுப் போட்டியை தடை செய்ய முடியுமா?

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு