ஏன்?எதற்க்கு?எப்படி?

எதையும் கேள்வி கேட்காமல் அப்படியே ஒப்புக்கொள்ளாதே..?

7 நவம்பர், 2008

அமெரிக்க அதிபராக பாரக் ஒபாமா! ஆதிக்கம் - ஆணவம் அழிந்து வெள்ளி முளைத்தது!

அமெரிக்க அதிபராக பாரக் ஒபாமா!
ஆதிக்கம் - ஆணவம் அழிந்து வெள்ளி முளைத்தது!

இன-மதச் சுவர்களை உடைத்துத்தள்ளி
புதிய உலகைப் படைத்திட வாழ்த்துவோம்!

தமிழர் தலைவர் விடுத்துள்ள அறிக்கை

அமெரிக்க அதிபராக பாரக் ஒபாமா வெற்றி பெற்றது குறித்து திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:-

அமெரிக்காவில் ஓர் புதுயுகம் பிறந்துள்ளது! ஏன் - ஒரு அமைதிப் புரட்சி - சமுதாயப் புரட்சி - வேட்டுச் சத்தத்தினால் அல்லாது, ஓட்டுப் பெட்டிகளின்மூலம் மலர்ந்துள்ளது! ஆம், பாரக் ஒபாமா என்ற 47 வயதுள்ள கறுப்புச் சூரியன் வெள்ளை மாளிகையில் சென்று, அதன் ஒளிக்கதிர்களை உலகமெங்கும் தகத்தாய பிரகாசத்துடன் பாய்ச்ச இருக்கிறது!

உலக வரலாற்றில் 2008 நவம்பர் 5

உலக வரலாற்றில் 2008 நவம்பர் 5 ஆம் தேதி - அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் வெளியான நாள் - ஒரு குறிப்பிடத்தக்க, மாற்றத்தை மக்களின் ஏமாற்றத்திற்கு இடம் அளிக்காது மக்களால் பேதமின்றிப் பெருவாழ்வு தொடங்கிட கால்கோள் இடப்பட்ட நாள்!

வெள்ளை மாளிகையின் வெள்ளை அதிபர் ஆபிரகாம் லிங்கன் உயிர்த்தியாகம் செய்தபோது, அவர் புதைக்கப்படவில்லை. கறுப்பின மார்ட்டின் லூதர் கிங் துச, நான் ஒரு கனவு காண்கிறேன்; என் நாட்டில் ஒரு நாள் வரும்! கறுப்பினக் குழந்தைகளும், வெள்ளை இனக் குழந்தைகளும் கைகோர்த்து நாம் அனைவரும் உடன்பிறப்புக்களே என்று உரத்தக் குரலில் பாடிடும் அந்நாள்தான் எனது கனவு என்று உருக்கத்துடன், உறுதியுடன் பேசிய பின்னர்தான், வெள்ளை நிற வெறியனின் துப்பாக்கி அவர் உயிரைக் குடித்ததினாலே, அவரும் உலகத்தின் கண்ணீர்ப் பூக்களோடு புதைக்கப்பட்டார்!

ஆனால், உண்மை என்ன? அவர்கள் புதைக்கப்படவில்லை; விதைக்கப்பட்டார்கள்!

அதன் சரித்திரச் சான்றுதான் மலர்ந்துள்ள ஒபாமாவின் வெற்றி; இதுவரை கறுப்பு நிறத்தினைக் கண்டு மூடிய அமெரிக்க வெள்ளை மாளிகையின் கதவுகள், பல லட்சக்கணக்கான வாக்கு முத்திரையின் தட்டுதல்களால் திறந்து, இன்னும் 75 நாள்களில் (ஜனவரி 20 இல்) அவர் அதிபர் நாற்காலி யில் அமர்ந்து புதியதோர் அமெரிக்காவை செதுக்கவிருக்கிறார்!

ஆணவமும் - ஆதிக்கமும்!

ஆணவமும் ஆதிக்கமும் என்றும் ஏகபோகம் செலுத்த முடியாது; மக்கள் எழுச்சி, விழிப்புணர்வு என்ற வெள்ளி முளைத்து விடியல் வந்துதான் தீரும் என்பது வரலாற்றின் பாடம்; காலத்தின் கருணைக் கட்டளை!

அவரை எதிர்த்துப் போட்டியிட்ட குடியரசுக் கட்சியின் வேட்பாளர் மெக்கெய்னுக்குக் கிடைத்த வாக்குகள் (50 மாநிலங்களிலும்) 173; ஒபாமாவுக்கு 349 வாக்குகள் கிடைத்தன.

270 இடங்கள் கிடைத்தாலே வெற்றி; ஆனால், அதற்குமேல் 70 இடங்கள் பெற்று சாதனை புரிந்துள்ளார்.

50 மாகாணங்களில் 28 மாகாணங்களை ஒபாமா கைப்பற்றி யுள்ளார்!

"மாற்றத்திற்கு வாக்களியுங்கள்" என்றார்; அம்மக்கள் - வாக்காளர்கள் அதனை ஏற்றனர்.

முத்தாய்ப்பான உரை

வெற்றி பெற்றவுடன் அவர் ஆற்றிய நன்றி உரை - அவரது முதிர்ச்சியின் முத்திரையாகத் தெறித்துள்ளது!

"இளையவர் - முதியவர்; ஏழை - பணக்காரர்; குடியரசுக் கட்சியினர் - ஜனநாயகக் கட்சியினர்; கறுப்பர் - வெள்ளையர்; லத்தீன் நாட்டவர் - ஆசியர்கள்; அமெரிக்கப் பூர்வகுடிகள், ஊனமுற்றோர் ஆகிய அனை வரும் ஒன்று சேர்ந்து ஓர் உண்மையை உலகிற்கு உணர்த்தியுள்ளனர்."

குடியேறியவர்களின் நாடா?

"வெள்ளையர்கள் மட்டுமே அமெரிக்கர்கள் அல்லர்; அனைவரும் ஒன்று சேர்ந்த நாடுதான் அமெரிக்கா என்பதை நிரூபித்துள்ளனர்" என்று பேசியுள்ளார் - அருமையான கருத்து.

"குடியேறியவர்கள் நாடு" (A Nation of immigrants) என்று அழைக்கப்படும் அமெரிக்கா, உண்மையில் இப்போதுதான் அய்க்கிய அமெரிக்க நாடு (United States of America - U.S.A.) என்பதற்கு உண்மையான பொருளை உலகுக்குக் காட்டியுள்ளது.

அமெரிக்கா மட்டுமல்ல, அவரிடம் உலகம் எதிர்பார்ப்பது அதிக மானது. பொருளாதாரப் பின்னடைவு, பல்வேறு நாடுகளில் நடை பெறும் இனப்படுகொலை, இன ஒதுக்கல், மனித உரிமைப் பறிப்பு, பகிரங்கமாக நடைபெறும் நிலையில் அவைகளைத் தடுத்து நிறுத் தும் மனிதநேயக் கொள்கைகள் அவரது ஆட்சியின் இலக்காகட்டும்!

அந்நாட்டின் அரிய ஜனநாயகப் பண்பைப் பார்த்து, நம் நாட்டு - குறிப்பாக தமிழ்நாட்டுத் தலைவர்கள் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்!

போட்டியிட்டு தோல்வியடைந்த மெக்கெய்ன் அவர்கள், நேற்றோடு நமது எதிர்ப்பு முடிந்துவிட்டது; நாம் அனைவரும் வெற்றி வீரர் ஒபாமாவை வாழ்த்துவோம்; ஒத்துழைப்போம் என்று கூறி யுள்ளாரே - அந்த மனப்பாங்கு அல்லவா உண்மை மக்களாட்சியின் மாண்பு! அதைக் கற்றுக்கொள்ள வேண்டாமா நம் நாட்டுத் தலைவர்கள்?

மதச் சுவர்கள் உடைபடட்டும்!

அமெரிக்க ஆம்ஸ்ட்ராங், முதலில் நிலவில் காலடி வைத்தபோது கூறினார்: இது எனது சிறிய காலடிதான் என்றாலும், இதுதான் மனிதகுலத்தின் மாபெரும் பாய்ச்சல்! என்று. அதுபோல, இவ்வெற்றி அமெரிக்காவின் அதிபர் தேர்தல் என்ற சிறு செய்தி எனினும், இனிமேல் உலகம் முழுவதும் வரும் ஒடுக்கப்பட்டோரின் எழுச்சிக்கு ஏற்றத்தின் பாய்ச்சலுக்கான அறிகுறியாகும்.

வெற்றி வாகை சூடிய பாரக் ஒபாமா, இன, மதச் சுவர்களை உடைத்துப் புதியதோர் உலகைப் படைப்பார் என்று விழைந்து அவரை வாழ்த்தும் உலகத்தோடு நாமும் இணைகிறோம்! நன்றி விடுதலை

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு