போர் தீவிரமடைந்துள்ள நிலையில் சமாதானப் பேச்சுக்கள் பற்றிய எதிர்பார்ப்புக்கள் எட்டாத தொலைவில் உள்ளன. பா.நடேசன்
தமிழீழ விடுதலைப் புலிகளையும் தமிழ் மக்களையும் பிரித்துப் பார்த்து குரூரமாக திருப்தியடைய சில சக்திகள் விரும்புகின்றன. ஆனால், அவையெல்லாம் கற்பனைகளாகவே இருக்கும். தமிழரின் தலைமைச் சக்தி புலிகள் இயக்கம்தான் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சுவிசிலிருந்து மாதம் இருமுறை வெளிவரும் 'நிலவரம்' (12.12.08) வார இதழுக்கு பா.நடேசன் வழங்கிய நேர்காணலில் மேலும் தெரிவித்துள்ளதாவது: கிளிநொச்சி மீதான முற்றுகை இறுக்கப்பட்டுள்ளது. எப்படியாவது கிளிநொச்சியைக் கைப்பற்றியே ஆவதெனச் சிங்களம் சூளுரைத்துள்ள நிலையில், என்ன விலை கொடுத்தாவது கிளிநொச்சியைக் காப்பாற்றியே தீர்வதென விடுதலைப் புலிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. களநிலவரம் உண்மையில் எவ்வாறாக இருக்கின்றது? சிங்களப் படைகளின் சிறப்பு டிவிசன்கள் இரண்டின் படையணிகள் கிளிநொச்சிக்கான சமரில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இதனால் கிளிநொச்சியின் மேற்கே பலமுனைகளில் கடும் சண்டைகள் நாள்தோறும் நடக்கின்றன. சிங்களப் படைகளின் முயற்சியை முறியடிக்கும் எதிர்ச்சமரில் புலி வீரர்கள் தீரத்துடன் போராடி வருகின்றனர். ...