டெஹல்கா.காம் இணையதளத்தின் ரகசிய ஆடியோ பதிவில் சிக்கியுள்ளார் வீரபாண்டி ஆறுமுகம்.

டெஹல்கா.காம் இணையதளத்தின் ரகசிய ஆடியோ பதிவில் சிக்கியுள்ளார் வீரபாண்டி ஆறுமுகம்.

இதுகுறித்து சிவில் உரிமை பாதுகாப்பு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

சேலம் பஸ் நிலையம் அருகே அங்கம்மாள் காலனியில் 31 ஏழை மக்கள் வசித்து வந்த நிலத்தை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் அடியாட்கள் வெளியேற்றி அதை கைப்பற்றினார்கள்.

அந்த நிலத்தின் மதிப்பு 25 கோடி ரூபாயாகும். பாதிக்கப்பட்ட ஏழை மக்களுக்காக எங்கள் மையம் அமைச்சர் மீது வழக்குத் தொடர்ந்து போராடி வருகிறது.

இதில் இருந்து ஒதுங்கி செல்ல வேண்டும் என்பதற்காக சேலத்தைச் சேர்ந்த கூடுதல் துணை நீதிபதி மற்றும் கூடுதல் அரசு வழக்கறிஞர் ஆகியோர், அமைப்பின் பொதுச் செயலாளர் ஹரிபாபுவுடன் நடத்திய உரையாடலை டெகல்கா.காம் இணைய தளம் ரகசிய கேமரா மூலம் பதிவு செய்து அம்பலப்படுத்தி உள்ளது.

அமைச்சர்களின் ஆட்களோடு சமரசம் செய்து கொண்டு, அங்கம்மாள் காலனி தொடர்பாக போடப்பட்ட வழக்கை திரும்பப் பெற வேண்டும் என்று அவர்கள் கூறியது பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

துணை நீதிபதியும், அரசு வழக்கறிஞர் ஒருவரும், ஹரிபாபுவுடன் நடத்திய உரையாடலை ரகசிய கேமரா மூலம் டெகல்கா.காம் பதிவு செய்துள்ளது.

அபகரிக்கப்பட்ட நிலத்தை வாங்கிக் கொள்ளும்படி கோயம்புத்தூரைச் சேர்ந்த நகை கடை நிறுவனம் ஒன்றை அமைச்சரின் ஆட்கள் நிர்ப்பந்தம் செய்ததும் அம்பலப்படுத்தப்பட்டுள்ளது.

முதலமைச்சர் கருணாநிதி இதில் தலையிட்டு, பல்வேறு நிலப்பறிப்பு புகார்களுக்கு ஆளாகி உள்ள அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தை பதவியில் இருந்து விலக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

அமைச்சர் சார்பாக பேரம் நடத்திய துணை நீதிபதி, அரசு வழக்கறிஞர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் முறையிட இருக்கிறோம் என்று கூறப்பட்டுள்ளது.

டெஹல்கா சொல்வது என்ன?:


வீரபாண்டி ஆறுமுகம் வழக்கு குறித்து டெஹல்கா.காம் வெளியிட்டுள்ள செய்தி:

வழக்கறிஞர் ஹரிபாபு, பாதிக்கப்பட்ட அங்கம்மாள் காலனி மக்களுக்கு தேவைப்படும் அனைத்து விதமான சட்ட உதவிகளையும் செய்து வருகிறார். இதற்காக அவரது அலுவலகம் தாக்கப்பட்டது. அவரது உயிருக்கும் மிரட்டல் உள்ளது.

திமுகவினர் ஹரிபாபுவை மாவோயிஸ்ட் தீவிரவாதி என சித்தரித்து வருகின்றனர். அவருக்கு எதிராக சேலத்தில் போராட்டத்தையும் நடத்தியுள்ளனர். இந்த நிலையில் அமைச்சருடன் சமரசமாக போகுமாறும் ஹரிபாபுவை மிரட்டத் தொடங்கியுள்ளனர்.

இதற்காக அவர் மீது கொலை முயற்சி வழக்கு ஒன்று சேலம் கூடுதல் உதவி மாஜிஸ்திரேட் கோர்ட்டில் பதிவாகியுள்ளது.

இந்தப் பின்னணியில், டெஹல்கா.காம் களத்தில் இறங்கியது. தன்னுடன் உதவி மாஜிஸ்திரேட்டும், அரசு வழக்கறிஞரும் சமரசம் பேசியது தொடர்பான ஆதாரங்கள் இருப்பதாக அவர் கூறினார். அந்த ஆதாரங்களை நம்மிடமும் (டெஹல்கா.காம்) ஒப்படைத்தார்.

கூடுதல் உதவி மாஜிஸ்திரேட் அமுதாவும், அரசு வக்கீல் மூர்த்தியும் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் சார்பில் தன்னுடன் பேசியதாக கூறுகிறார் ஹரிபாபு.

நீதிபதி மற்றும் வக்கீல் ஆகியோர் தலா இருமுறை ஹரிபாபுவுடன் பேசியுள்ளனர். இவை இரண்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளன.

செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் இந்த சந்திப்பு நடந்துள்ளது.

அதன் விவரம்..

ஹரிபாபு: அங்கம்மாள் காலனி விவகாரம் தொடர்பாக நான் கடந்த எட்டு மாதங்களாக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறேன். ஒரு வக்கீலாக உங்களால் இதைப் புரிந்து கொள்ள முடியும்.

என் மீது போடப்பட்டுள்ள 307வது பிரிவு வழக்கு (கொலை முயற்சி) பொய் வழக்கு என்பது உங்களுக்குத் தெரியும். இந்த வழக்குக்காக அங்கம்மாள் காலனி தொடர்பாக அமைச்சர் மீது நான் போட்ட வழக்கை வாபஸ் பெறச் சொல்கிறீர்களா?

மூர்த்தி: என்னால் எதுவும் செய்ய முடியாது. எனது நிலையை உங்களிடம் சொல்லி விட்டேன். நான் இல்லாவிட்டால், இன்னொரு வக்கீலை எனது இடத்தில் நியமித்து, உங்களுக்கு எதிராக வாதாடச் சொல்வார்கள். மாஜிஸ்திரேட் அமுதாவை அவரது இல்லத்தில் சந்திக்க ஏற்பாடு செய்கிறேன்.

நீங்கள் மேடத்திடம் வெளிப்படையாக பேசுங்கள். பஞ்சாயத்து செய்வதற்கு சரியான மாஜிஸ்திரேட்டாக அவர் உள்ளார். உங்களது மனதில் உள்ள எல்லாவற்றையும் அவரிடம் தயக்கமே இல்லாமல் சொல்லுங்கள்..

மூர்த்தி ஏற்பாடு செய்வதாக கூறிய தினத்தன்று மாஜிஸ்திரேட்டை ஹரிபாபுவால் சந்திக்க முடியவில்லை. அதற்கு அடுத்த நாள் நீதிபதியின் அறையில் சந்திப்பு நடந்தது.

நீதிபதியுடன் இருமுறை அவரது அறையில் ஹரிபாபு பேச்சு நடத்தியுள்ளார். அந்த இரண்டு சந்திப்புகளின்போதும் பேசியவற்றை டேப் செய்துள்ளார்.

பாபுவும், அவரது வக்கீலும் அங்கம்மாள் காலனி வழக்கு தொடர்பான அனைத்து விவரங்களையும் மாஜிஸ்திரேட்டிடம் தெரிவித்துள்ளனர். அதற்கு மாஜிஸ்திரேட் அமுதா, சமரசமாக போகுமாறு அறிவுரை கூறியதாக ஹரிபாபு கூறுகிறார்.

மேலும் அங்கம்மாள் காலனி விவகாரம் தொடர்பாக இன்னொரு ஆதாரம் தன்னிடம் இருப்பதாக கூறும் ஹரிபாபு அதை பொருத்தமான சமயத்தில் வெளியிடுவதாகவும் தெரிவித்துள்ளார்.

அமைச்சருக்கு ஆதரவாத கூடுதல் உதவி மாஜிஸ்திரேட்டும், அரசு வக்கீலும் செயல்படுகிறார்கள். இதை வெளிப்படுத்துவதே அவர்களுடன் நடந்த பேச்ச நான் டேப் செய்ததற்கு முக்கிய காரணம்.

என் மீதான பொய் வழக்கின் விசாரணை வேண்டுமென்றே தாமதப்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த 2006ம் ஆண்டு செப்டம்பர் முதல் 2008 ஜூலை 24ம் தேதி வரை மொத்தம் 19 விசாரணைதான் நடந்துள்ளது.

இந்த வழக்கில் நான் நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்கக் கோரி நான் தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது. ஆனால் நான் அமைச்சருடன் சமரசமாகப் போக வேண்டும் என நீதிபதியும், வக்கீலும் பேசிய பின்னர் எனது கோரிக்கை மனுவை தற்போது நிலுவையில் வைத்துள்ளனர் என்று கூறியுள்ளார் ஹரிபாபு.

இவ்வாறு டெஹல்கா செய்தியில் கூறப்பட்டுள்ளது.

மருத்துவமனையில் வீரபாண்டி ஆறுமுகம்:

இந் நிலையில், அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், உல் நலக்குறைவு காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் சேர்ந்துள்ளார்.

அவருக்கு கடும் காய்ச்சல் மற்றும் மூச்சுத் திணறல் ஏற்பட்டிருப்பதாக அவருக்கு வேண்டிய வட்டாரங்கள் கூறுகின்றன.

முதல்வர் கருணாநிதி நேற்று காலை மருத்துவமனைக்கு சென்று அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தை சந்தித்து உடல் நலம் விசாரித்தார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தந்தை பெரியாரும், சுயமரியாதை இயக்கமும் தோன்றுவதற்கு முன்... மனித சமத்துவப் போராட்ட முன்னோடிகள்

செக்ஸ் படங்களையும் அனுமதிக்கலாம்!-கமல்

பெரியார் மருந்தியல் மகளிர் கல்லூரி ;கல்லூரி வளாகத்தில் ஆராய்ச்சிக்குப் பயன்படும் வகையில் சுமார் 200 வகையான மூலிகைச் செடிகளை உடைய மூலிகைப் பண்ணை