நகைசுவை இடையா? இது இடையா
திருவள்ளுவர் சமணர் என்று ஒரு சாராரும், நோ.. நோ.. அவர் வைணவர் என்று வேறொரு சாராரும் சொந்தம் கொண்டாடிய சோதனைக் காலத்தில், திருவள்ளுவர் முஸ்லீம் என்பதற்கு போதிய ஆதாரம் இருக்கிறது என்று ஒரு பெரிய ‘ஹிரோஷிமா குண்டை’ தூக்கிப் போட்டார் என் நண்பரொருவர்.
வள்ளுவர் வரைந்த முதற் பாடலிலேயே “அல்லாகு” என்று வருவதினால் அவர் ‘ஆதிபகவன்’ என்று அடித்துச்சொல்வது அல்லாவைத்தான் என்ற அட்டகாசமான பாயிண்டை அடுக்கி வைத்தார் அவர்.
“அகர முதல எழுத்தெல்லாம்
ஆதிபகவன் முதற்றே வுலகு”
என்ற குறளில் வரும் முதலெழுத்து “அ”, நடு எழுத்து “ல்லா”, கடைசி எழுத்து “கு” இவற்றைக் கூட்டிக் கழித்து, பெருக்கிப் பார்த்தால் “அல்லாகு” என்று வருகிறதாம். வாவ்….! எழுதியவருக்கே தெரியாத எதிர்பாரா விஷயங்களை ஏடாகூடமாக கண்டுபிடித்து தருவதற்காகவே ஒரு கூட்டம் கங்கணம் கட்டிக்கொண்டு அலையத்தான் செய்கிறது.
என்ன பார்வை இந்த பார்வை
இடை மெலிந்தாள் இந்த பாவை
என்ற வரிகளை கண்ணாதாசன் எழுத, “ஆஹா ஓஹோ.. என்னமாய் ஒரு அற்புதமான சிந்தனை?” என்று கண்ணதாசனுக்கு முன்னாலேயே ஒருவர் மேடையில் ஐஸ்கட்டியை ‘டன்’ கணக்கில் தலையில் வைத்தாராம்.
“பார்வை” என்ற வார்த்தையில் இடையில் உள்ள “ர்” என்ற எழுத்து மெலிந்து காணாமல் போனதும் அது “பாவை” என்று ஆகிவிடுகிறது. இதனைத்தான் கண்ணதாசன் சூசகமாகச் சொல்கிறார் என்று சொல்ல, “இப்படி ஒரு மேட்டர் இந்த பாட்டில் இருப்பது இப்பத்தான் எனக்கே தெரிகிறது” என்று அப்பாவித்தனமாக சொன்னாராம் பிழைக்கத் தெரியாத நம் கவிஞர்.
இந்த இடைப்பட்ட காலத்தில் எத்தனையோ கவிஞர்கள் இடையைப் பற்றி இடையறாது பாடிவிட்டு போய்விட்டார்கள். இவர்களுக்கிடையே ஒரு இடைத்தேர்தல் வைத்தால் அதில் வெற்றி வாகைச் சூடுவது கண்ணதாசன்தான்.
இளமை துள்ளும் பாடல்களில் ‘இடை’ வருணனையை இடையிடையே இடைச்செருகலாக எப்படியாவது நுழைத்து விடுவார் இவர். இடை ஆராய்ச்சியில் கண்ணதாசன் ‘முனைவர்’ பட்டம் பெற்றவர் என்று சொல்ல வேண்டும்.
“நாடகம் ஆடும் இடையழகு” என்றும் “சின்னக் கொடியிடை என்னைப் பிடியென ஆடும் அழகென்ன” என்றும் விதவிதமான கற்பனையைக் கலந்து விருந்து படைப்பார். சொல்லவரும் கருத்துக்களில் ஒரு நளினமிருக்கும்; ஆபாசம் இருக்காது.
விஷயங்களை விரசம் கலக்காமல்; சூசகமாக; சர்க்கரை கலந்த சூரணமாகத் (Sugar Coated pills.. என்பார்களே) தருவதில் கண்ணதாசன் கில்லாடி மட்டுமல்ல பலே.. பலே.. கில்லாடி!!.
‘எடைக்கு எடை’ நாணயம் கொடுப்பதுபோல் இதற்காகவே இவருக்கு ‘இடைக்கு இடை’ ஏதாவது சன்மானம் கொடுத்திருக்கலாம்.
‘தடியிடை’ எந்தக் கவிஞனுக்கும் பிடிக்காது போலும். கவிஞன் ‘மெல்லிடை’ என்றான். ‘கொடியிடை’ என்று சொல்லிப் பார்த்தான். திருப்தி இல்லை. இன்னும் சற்று மெலிய வைத்து ‘நூலிடை’ என்றான். ஊஹூம் அவன் எதிர்பார்த்த ‘எஃபெக்ட்’ கிடைக்கவில்லை. கடைசியில் “இடையே இல்லை” என்று சொல்லி விமோசனம் அடைந்துக் கொண்டான்.
நடையா இது நடையா – ஒரு
நாடகமன்றோ நடக்குது
இடையா? இது இடையா? – அது
இல்லாததுபோல் இருக்குது.
என்ற கண்ணதாசனின் பாடல் கலக்கலான உதாரணம். (இடையே இல்லாவிட்டால் பி.சி.சர்க்கார் மேஜிக் -ஷோவில் காட்டுவதுபோல் உடல் வேறு, கால் வேறாக அல்லவா போய்விடும் என்றெல்லாம் கேள்விகள் கேட்டு என்னைப் படுத்தக்கூடாது)
மனுஷன், இடியுடன்-மின்னலை இணைத்து பாடியிருக்கிறாரோ என்னவோ எனக்குத் தெரியாது. ஆனால் இடையுடன்-மின்னலை இணைத்து நிறைய பாடியிருக்கிறார்.
“இல்லை என்று சொல்வதுந்தன்
இடையல்லவா – மின்னல்
இடையல்லவா”
என்ற வரிகளை எடுத்துக்காட்டாகச் சொல்லலாம். மின்னல் வெட்டினால் கண்கள் கூசும் அல்லவா? அப்படியொரு மின்சார வெட்டாம், அந்த இடையில்.
இடையின் மீது கரிசனம் முற்றிப் போய் கவிஞருக்கு சில சமயம் ‘கிலி’ தொற்றிக் கொள்ளும். இடையை இவ்வளவு மெல்லியதாக எழுதி விட்டோமே, ஒடிந்து விட்டால் என்னவாகும் என்ற பயம் ஏற்பட்டுவிடும். அடுத்த வரியில் அவரே அதற்கு ‘சமாளிபிகேஷன்’ செய்து ‘சால்ஜாப்பும்’ கூறிவிடுவார்.
“ஒடிவது போல் இடை இருக்கும்” என்ற கேள்வி பிறக்க “இருக்கட்டுமே!” என்ற பதிலும் தொடர்ந்து வரும். நாயகி நடந்து போனாலே கவிஞருக்கு வெலவெலக்கத் தொடங்கி விடும்.
“மெல்ல நட மெல்ல நட மேனி என்னாகும்!
முல்லை மலர் பாதம் நோகும்-உந்தன்
சின்ன இடை வளைந்தாடும்
வண்ணச் சிங்காரம் குலைந்து விடும்!”
என்ற தன் பயத்தை வெளிக்காட்டி விடுவார். நாயகி ‘ஸ்லோமோஷனில்’ நடந்து போவதுதான் கவிஞருக்கு பிடிக்கும் போலும். வேகமாக நடந்தால் ஆபத்து என்று அபாயச் சங்கு முழங்குகிறார்.
இந்த ‘இடை’ சமாச்சாரங்களைத் தொடங்கி வைத்தது கம்பனா அல்லது அவனுக்கு முந்திய கொம்பனா என்று சரியாக சொல்லத் தெரியவில்லை.
“இழைந்த நூலினை மணிக்குடஞ்
சுமக்கின்ற தென்னக்
குழைந்த நுண்ணிடைக் குவியளா
வனமுலைக் கொம்பே”
என்கிறார் கம்பர். “மணிக்குடங்களை தாங்க இயலாமல் வளையும் கொடிபோல உன் இடை இருக்கிறது என்று திருவாய் மலர்ந்தருள்கிறார்.
‘இடை’ என்று கேட்டுக் கேட்டு புளித்துப் போய் விட்டது, நாம் சற்று வித்தியாமாக எழுதிப் பார்க்கலாம் என்று முயன்று வம்பில் மாட்டிக் கொண்ட கவிஞர்களும் உண்டு.
“குறுக்குச் சிறுத்தவளே” என்றும் ''ஒல்லி ஒல்லி இடுப்பே/ ஒட்டியாணம் எதுக்கு?/ ஒத்த விரல் மோதிரம்/ போதுமடி உனக்கு...'' என்றெல்லாம் மாற்று வார்த்தைகளைப் போட்டு மகிழ்ந்துக் கொண்டார்கள்.
நயாகராவுக்கு, வயாகரா என்று எதுகை மோனை போட்டதைப் போல் “இடுப்பு” என்று முடியும் வரிக்கு “அடுப்பு” என்று “ரைமிங் வோர்ட்ஸ்” போட்ட பாடலாசிரியர்களை நினைத்தாலே எனக்கு கடுப்பு வருகிறது.
வைரமுத்து “இஞ்சி இடுப்பழகி” என்று ஏடாகூடமாக எழுதப் போய் தமிழ்மக்கள் அனைவருமே தொல்காப்பியர்களாக மாறி “இஞ்சி இடுப்பழகி”க்கு அருஞ்சொற்பொருள் தேட ஆரம்பித்து விட்டார்கள்.
இஞ்சியைக் கையிலேந்தி அவரவர் தங்கள் ஆராய்ச்சியின் முடிவை அறிவித்தார்கள். “இஞ்சியானது உருவத்தில் பெருத்தும் இடையில் சிறுத்தும் இருப்பதனால் இஞ்சி எடுப்பழகி” என்று கூறியிருக்கக் கூடும் என்று சில பிரகஸ்பதிகள் பிரகடனம் செய்தார்கள்.
இஞ்சியை தினந்தோறும் கரைத்துக் குடித்தால் இடையானது உடுக்கையைப் போன்று குறுகி விடும் என்று சித்தவைத்திய சிகாமணிகளாய் வேறுசிலர் வியாக்யானம் தந்தார்கள்.
வில்லங்கம் பிடித்த ஒரு பத்திரிக்கை விவகாரமான ஒரு கண்டுபிடிப்பை வெளியிட்டு தாய்க்குலத்தின் ஒட்டு மொத்த கோபத்துக்கும் ஆளாகும் அளவுக்கு அந்த தமிழினக் கவிஞரை தாறுமாறாக மாட்டி விட்டது.
ரேஸில் ஓடுகின்ற குதிரை மிடுக்காக காட்சியளிக்க வேண்டும் என்பதற்காக அதன் வாலுக்கடியில் இஞ்சியைச் செருகி விடுவார்களாம். அதனால் ஏற்படும் எரிச்சலைத் தாங்க முடியாத குதிரைகள் தாங்கித் தாங்கி நடக்குமாம். இது கேட்டு மாதர் சங்கத்தார் எப்படி கொதித்துப் போயிருப்பார்கள் என்பதை நீங்கள் கற்பனைச் செய்துக் கொள்ளலாம்.
கண்ணதாசனிடமிருந்து வெளிப்பட்ட ‘மூடுமந்திர’ நளின பாஷை மற்ற கவிஞர்களிடத்தில் இல்லாமல் போனது வருத்தத்திற்குரியது.
“எப்படி? எப்படி? சமைஞ்சது எப்படி?” மற்றும் “கட்டிப்புடி கட்டிபுடிடா” போன்ற பட்டவர்த்தனமான பாஷையில் வாலிபக் கவிஞர் வாலி கையாண்ட வார்த்தைகள் நம்மை முகஞ்சுளிக்க வைக்கிறது.
"மடி மேலே அழகு சிலை ,
இதழ் மேலே கனியின் சுவை,
இடை மேலே பருவ சுமை,
இது தானே இனிய கதை!"
என்ற கவிஞர் வாலியின் வரிகளில் விரசம் மேலோங்கி இருப்பதை நாம் காண முடிகிறது. தணிக்கைக் குழுவின் கத்தரிக்கோலுக்கும் ஆளாகியது.
“மெல்லிடை பார்த்தேன்
அடடா பிரம்மன் கஞ்சனடா
சற்றே நிமிர்ந்தேன்
தலைசுற்றிப் போனேன்
அடடா அவனே வள்ளலடா”
என்ற வைரமுத்து பாடல் வரிகள் “பச்சை” என்று குற்றம் சொல்ல முடியாதென்றாலும் ஒரு விதமான “மைல்ட் ஷாக்” ஏற்படுத்தும் ரகம்தான்.
“அத்தை மகள் ரத்தினத்தை அத்தான் மறந்தாரா
அன்ன நடை சின்ன இடை எல்லாம் வெறுத்தாரா?”
என்ற கண்ணதாசனின் பாடலில் “சின்ன இடை இருந்தும் என்னை என் தலைவன் வெறுத்து விட்டானா?” என்று தலைவி நம்மைப் பார்த்து கேட்கையில் நமக்கே அந்த பாத்திரத்தின்மேல் இரு இனம் புரியாத இரக்கம் ஏற்படுகிறது.
“யாருக்கு மாப்பிள்ளை யாரோ..
அவர் எங்கே பிறந்திருக்கின்றாரோ?”
என்று தலைவி பாடுவாள். கைப்பிடிக்க போகின்ற கணவன் எப்படி இருப்பானோ என்ற கவலை அவளிடத்திலிருந்து ஒவ்வொன்றாய் வெளிப்படும்.
“ஊரறிய மாலையிடுவாரோ..
இல்லை ஓடி விட எண்ணி விடுவாரோ..
சீர் வரிசை தேடி வருவாரோ..
இல்லை சின்ன இடை எண்ணி வருவாரோ..”
என்ற வரிகளில் “உள்ளத்தழகை பார்க்காமல், உடலழகை மட்டும் மோகிக்கும் கணவன் வாய்த்து விட்டால் நம் நிலைமை என்னாகுமோ? ஏதாகுமோ?” என்று நாயகி கவலையுறுகையில் நமக்கும் அவள் மீது பச்சாதாபம் ஏற்படுகிறது,
படிப்போர் மனதில் பாதிப்பை ஏற்படுத்தும் இதுபோன்ற வார்த்தைகள்தான் ஒரு படைப்பாளிக்கு கிடைக்கக் கூடிய முழுமையான வெற்றி.
கண்ணதாசனின் மற்றொரு ‘மாஸ்டர் பீஸ்’ “அன்புள்ள மன்னவனே!” என்று தொடங்கும் காதற் கடித பாடல்.
“இளையகன்னியின் இடை மெலிந்ததோ
எடுத்த எடுப்பிலே நடை தளர்ந்ததோ?”
என்ற சந்தேகத்தை நாயகன் கிளப்ப
“இடை மெலிந்தது இயற்கை அல்லவா
நடை தளர்ந்தது நாணம் அல்லவா”
என்ற நெத்தியடி பதில் நாயகியிடமிருந்து வரும். எவ்வளவு நாசுக்கான ‘இடை’ வருணனை?
எகிப்து போன்ற நாடுகளில் பிரபலமாக இருக்கும் ‘இடை நடன’த்திற்கு ஆங்கிலப் பெயரோ “பெல்லி டான்ஸ்”. தமிழில் மொழி பெயர்க்க வேண்டுமெனில் “தொந்தி நடனம்” என்றோ “தொப்பை நடனம்” என்றோ கண்றாவியாக மொழிபெயர்க்க வேண்டிவரும்.
முத்தமிழ் என்று போற்றப்படும் நம் மொழிக்கு வல்லினத்திலிருந்தும், மெல்லினத்திலிருந்தும், இடையினத்திலிருந்தும் ஒவ்வொரு எழுத்தினை தேர்ந்தெடுத்து “தமிழ்” என்ற இனிமையான பெயரைச் சூட்டிய நம் மூதாதையர்களுக்கு ஒரு “ஓ” போட வேண்டும்.
அம்சமாக (‘மடிப்பு ஹம்ஸா’ அல்ல) பெயர் வைப்பதில் தமிழனுக்கு மிஞ்சி யாருமே இல்லை எனலாம். மனித உடம்பில் இடைப்பட்ட பகுதிக்கு “இடை” என்ற எத்துணைப் பொருத்தமானப் பெயர் !!!!
கருத்துகள்
அருமையான இடை ஆய்வு.
என்ன பார்வை..உந்தன் பார்வை.. பாவையாக்கி ரசிக்க வைத்துள்ளார்.
ரசித்தேன்.